கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி 6     மன்னிக்கிற தேவன்     சங்கீதம் 86:1-17

      ‘ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்,

உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை

மிகுந்தவருமாயிருக்கிறீர்’ (சங் 86:5).

        கர்த்தர் நல்லவர். நம்முடைய வாழ்க்கையில் அவர் அனுமதிக்கிற எல்லாமே நன்மைக்கு ஏதுவானவைகள். ஆனால் கர்த்தருக்குப் பிரியமில்லாத அநேக காரியங்களை நாம் செய்யும் பொழுது, தேவனோடு கொண்டிருக்கிற ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது. அருமையானவர்களே! அவ்விதமான சமயங்களில் நம் வாழ்க்கையை எவ்விதம் சரி செய்வது? நம்முடைய பாவங்களை உணர்ந்து, மனந்திரும்பி மன்னிப்புக் கேட்கும்பொழுது மாத்திரமே. வேதம் சொல்லுகிறது அவர் மன்னிக்கிறவர். 

      மீகா தீர்க்கத்தரிசி ‘தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்’ (மீகா 7:18) என்று சொல்லுகிறார். நம்முடைய மீறுதல்களை ஒப்புக்கொள்ளும் பொழுது கர்த்தர் நம்மை மன்னிக்கிறார். அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் நம் வாழ்க்கை முழுவதிலும் கிருபை செய்யவே விரும்புகிறார். ஆகவேதான், ‘நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்’ (யோவேல் 2:13).

        அருமையான சகோதரனே! சகோதரியே! தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். உங்கள் வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை விட்டு விலகுங்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையையும், குடும்பங்களையும் கட்டுவார். உங்களுடைய வாழ்க்கையில் கிருபையும், இரக்கமும், அன்பும், சமாதானமும் நிறைவாய்க் கொடுக்க வல்லவர் அவர். அப்பொழுது நீங்கள் தேவனுடைய நல்ல ஈவுகளை அனுபவிக்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு சாட்சியாக வாழுவதையும் கண்டுணரலாம். தேவன் தாமே உங்களை அவ்விதமாகவே மாற்றுவாராக. ஆமென்!