டிசம்பர் 16      

      “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து”சங்கீ 103:3

      நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்கு விரோதமாக செய்த பாவங்களை மன்னிக்கிறவர் தேவன் மாத்திரமே. நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதா? தேவன் தாமே, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்”(சங் 32:1-2) என்று சொல்லுகிறான். நாம் நம்முடைய பாவங்களை உணர்ந்து கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு மனந்திரும்புவது அவசியமானது. அது  நம்முடைய ஆத்துமாவிற்கு நல்லது.

      நமக்கும் தேவனுக்கும் இடையில் எந்த ஒரு பாவமும் இல்லாதபடிக்கு பாதுக்காத்துக் கொள்ளுவது மிக அவசியமானது. இன்னுமாக சங்கீதம் 32:5 -ல் “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்”என்று சங்கீதக்காரன் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். ஒரு மெய்க் கிறிஸ்தவன் தன்னுடைய பாவங்களை உணர்ந்து கர்த்தரிடத்தில் மனந்திரும்புவது மிக அவசியமான செயலாகும்.

      அநேக சமயங்களில் நாம் தவறிவிடுகிறோம். ஆனால் அதை உணர்ந்து மனந்திரும்புவது தான் மேன்மையான செயலாகும். நாம் பாவமே செய்யாமல் ஒரு வாழ்க்கை வாழ முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதை மன்னிக்கிற ஒரு தேவன் உண்டென்று அறிந்து அவரிடத்தில் மன்னிப்பு கேட்பது நமக்கு எப்பொழுதும் உயர்வைத் தரும். “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்”(ஏசாயா 43:25) என்று சொல்லுகிறார். இவ்வளவு உருக்கமான தேவனிடத்தில் நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவோம். அவருக்கும் நமக்கும் இடையில் இருக்கும்படியான தடுப்பு சுவரை அனுமதிக்கக்கூடாது. அப்பொழுது மெய்யான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெறுவோம். பாவம் எங்கிருக்கிறதோ அங்கு சந்தோஷமில்லை. இன்னும் உன் வாழ்க்கையில் விரும்பி செய்கிற பாவம் உண்டா? தேவனிடத்தில் அறிக்கையிட்டு மனந்திரும்பு.