ஜனவரி 11

“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது” (சங்கீதம் 34:10).

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருப்பது அரிதான காரியம். ஆனால் சிங்ககுட்டிகள் கூட தாழ்ச்சியடையக் கூடும், பட்டினியாய் இருக்கவும் கூடும். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒருநாளும் அது நேரிடாது என்று ஆண்டவர் சொல்லுகிறார். கர்த்தரை மெய்யாய்த் தேடுகிற அவருடைய பிள்ளைகளுக்கு அவர் நன்மையை வழங்காமல் இருக்க முடியுமா? மிக அழகாக ஆண்டவர் சொல்லுகிறார், ஒரு நன்மையும் குறைவுபடாது. என்ன ஒரு ஆச்சரியமான காரியமாய் காணப்படுகிறது. இந்த அருமையான தேவன் நம்மைக் குறித்து அக்கறையுள்ளவராய், கவனித்துக்கொள்ளுகிறவராய், எப்பொழுதும் இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. “தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” (சங்கீதம் 84:11) என்று வேதம் சொல்லுகிறது. தேவன் தம்முடைய மக்களைக் குறித்து அக்கறையுள்ளவராய் இருக்கிறார். ஆகவேதான் “இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத்தேயு 6:32) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய தேவைகளைக் கர்த்தர் அறிந்திருக்கிறது மாத்திரமல்ல, நம்முடைய தேவைகளை அவர் நிச்சயமாக  சந்திக்கிறார். நன்மையை வழங்காமல் இருக்க மாட்டார். நாம் இந்த தேவனைச் சார்ந்து வாழுகின்றோம் என்ற உணர்வோடு காணப்படுவது மிக அவசியம். ஆகவேதான் தேவன் இந்த அருமையான வாக்குத்தத்தத்தின் உன்னத மகிமையையும்  அதின் உண்மைத்தன்மையையும் விளக்கப்படுத்தும்படியாக, சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது என்று சொல்லுகிறார். தேவன் நிச்சயமாக நம்முடைய தேவைகளைச் சந்திப்பார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.