“என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்” (சங்கீதம் 38:18).
பொதுவாக தங்களுடைய பாவத்தைக் குறித்த உணர்வைக் கொண்டவர்களை அதிகமான விதத்தில் நாம் பார்க்க முடிவதில்லை. தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதம் பெறவும் தங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் மிக கருத்துள்ளவர்களாக இருக்கிறவர்கள் அதேவிதமாக தங்கள் பாவத்தைக் குறித்த உணர்வைக் கொண்டிருப்பது அரிதாக இருக்கிறது. ஆனால் தாவீது, “என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு” என்று சொல்லுகிறார். நான் அதை மறைக்காமல் அறிக்கையிடுவேன் என்றும் சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்களை மெய்யான உணர்வோடு அறிக்கைசெய்வது மிக முக்கியமான காரியம். மேலும் நாம் நம்முடைய பாவங்களைக் குறித்து மெய்யாலுமே வருத்தப்படுகிறவர்களாக இருக்கிறோமா என்பதைச் சிந்திப்பது அவசியமாய் இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய பாவங்கள் அவருக்கும் நமக்கு நடுவே பிரிவினையை உண்டாக்குகிறது என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் பாவத்தைக் குறித்த உணர்வோடும், அதை அறிக்கையிட்டு தேவனோடு ஒப்புரவாக வேண்டும் என்பதான ஒரு எண்ணத்தோடு வாழுகிற வாழ்க்கை தேவை. அது நிச்சயமாக நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பெரிய ஆசீர்வாதத்தையும், தேவனுக்கும் நமக்கும் இருக்கிற உறவைப் புதுப்பிக்கிறதாகவும் காணப்படும். ஆகவே நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம் பாவத்தைக் குறித்து உணர்ந்து வருத்தப்பட்டு தேவனிடத்தில் அதை அறிக்கையிடுவோம்.