ஜூலை 21
“ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே” (2 தெசலோ 3:10)
ஒரு மெய்கிறிஸ்தவன் ஒருகாலும் சோம்பேரியாக இருக்கமாட்டான். கிறிஸ்துவ பக்தி என்பது ஆலயத்தில் மாத்திரமல்ல, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், நம்மைச் சரியான ஒரு மனிதனாக நிலை நிறுத்துகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் அவன் உண்மையுள்ளவனாகக் காணப்படவேண்டும் என்பதை வேதம் தெளிவாக போதிக்கிறது. ஏனென்றால் அவன் எதைச்செய்தாலும் அதை கர்த்தருடைய மகிமைக்கென்று செய்யவேண்டுமென்று வேதம் சொல்லுகிறது. அநேகர் பக்தி வேறு, வேலை வேறு என்பதைப்போல ஜீவிக்கிறார்கள். இல்லை, உனக்குள் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர் உன்னத் தேறினவனாக நிறுத்துகிறார். யோசேப்பு காரியசித்தியுள்ளவனாய்க் காணப்பட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஞானம் உலகப்பிரகாரமான வேலையிலும் அவன் மிகவும் நேர்த்தியாகச் செய்ய உதவிற்று.
இந்த தெசலோனிகேயர் சபையில் சிலர் பக்தி என்ற போர்வையில் வேலை செய்யாமல் சுற்றித் திரிகிறவர்களாகக் காணப்பட்டார்கள். அருமையானவர்களே! மெய்யான சத்தியத்தை அறிதல் நம்மை முன்பைவிட அதிக ஞானமுள்ள மனிதனாக மாற்றும். இவ்விதமான மக்களைப்பார்த்து பவுல் மேலும் சொல்லுகிறார். “உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விபடுகிறோம் (2 தெச 3:11).
நாம் எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யும்படியாக வேதத்தில் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். ஆகவே தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற உலக வேலைகளையும் தேவனுடைய நாமத்தினால் செய்வோமானால் அதில் நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பார்க்கமுடியும். கடினமான வேலையாயிருந்தால் அதில் தேவனுடைய ஒத்தாசையை அதிகமாய்த் தேடுங்கள். தேவன் ஏற்ற ஒத்தாசையை உங்களுக்கு அனுப்புவார்.