“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்” (யூதா 1:20).
மெய்யாலுமே நாம் அநேக சமயங்களில் ஜெபிக்கிறோம். ஆனாலும் கூட நம்முடைய வாழ்க்கையில் அதை ஸ்தோத்தரத்தோடே கர்த்தரின் கரத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறேன், அவர் அதில் வழிநடத்துவார் என்று விசுவாசத்தோடு அவரைத் துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதுமில்லை. பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைச் சார்ந்து வாழுகிற வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கை. ஒவ்வொரு விசுவாசிக்கும் இது தேவன் கொடுத்திருக்கின்ற மிக உன்னதமான சிலாக்கியம். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை அவருடைய மேன்மையை, துணையை மற்றும் ஆறுதலை எந்தளவுக்கு நாம் உணருகின்றோமோ அந்தளவுக்கு நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றியுள்ளவர்களாகக் காணப்படுவோம். பரிசுத்த ஆவியானவர் எனக்காக எல்லாவற்றையும் செய்துமுடிக்கும்படியாக என்னோடு கூட இருந்து, எல்லாக் காரியங்களிலும் அவர் வழிநடத்தும்பொழுது நான் ஏன் என்னுடைய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்துக் கலங்க வேண்டும்? நம்முடைய வாழ்க்கையில் எதிர்காலத்தைக் குறித்த ஒரு நிச்சயமற்ற நிலையில் பயம் காணப்படும் என்றால் நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்துகொள்ளும்படியான விதத்தில் சார்ந்துகொள்ளவில்லை. நாம் பரிசுத்த ஆவியானவரோடு கொண்டிருக்கிற ஐக்கியம் மிக முக்கியமானது. பரிசுத்த ஆவியானவரின் துணையை நாம் அறியாமல் வாழ்வதே நம்முடைய வாழ்க்கையின் வியாகூலத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து அவரைத் துதிப்பதின் மூலமாக நாம் நிச்சயமாக சந்தோஷத்தைப் பார்க்க முடியும். தேவனுடைய உன்னதமான காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் காண் முடியும். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து ஜெபிப்பது மட்டுமல்லாமல், அவர் அந்த காரியத்தில் நம்மை வழிநடத்துவார் என்ற விசுவாசத்தோடு அவரைத் துதிக்கவும் ஸ்தோத்தரிக்கவும் வேண்டும். அதன் மூலமாக நம்முடைய பயமும் வியாகூலமும் நீக்கப்படுகிறதையும் நாம் பார்க்க முடியும்.