கிருபை சத்திய தின தியானம்

 ஜீன் 3     கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்     எபே 2 : 1 – 10

‘அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்’

( எபேசியர் 2 : 5)

இரட்சிப்பு என்பது தேவனுடைய மகத்துவமான உன்னத செயல். இன்றைக்கு இரட்சிப்பு என்றால் மிக மலிவாக எண்ணப்படுகிறது. இரட்சிப்பைக் குறித்து மிகவும் மலிவானதாகப் போதிக்கப்படுகிறது. இயேசுவை யார் யாரெல்லம் ஏற்றுக் கொள்ளுகிறீர்களோ அவர்கள் கையைத்தூக்குங்கள், மேடைக்கு முன் வாருங்கள், கையப்பமிடுங்கள் என்று போதிக்கப்படுகிறது. அவ்விதமாகச் செய்கிறவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள். ஆனால் அன்பானவர்களே! தேவ ஆவியானவர் ஒரு  இருதயத்தில் நடப்பிக்கும் ஒரு உன்னதமான கிரியை இது. நீதியான வாழ்க்கைக்கு மரித்துப் போன ஒரு மனிதன் நீதிக்கு ஏதுவாக உயிர்பிக்கப்படுகிறதே இரட்சிப்பு என்று சொல்லப்படுகிறது.

            ஆதாம் ஏவாள் என்றைக்குத் தேவனுக்கு கீழ்படியாமல் பாவஞ்செய்தார்களோ, அன்றைக்கே அவர்கள் ஆத்துமா ‘சாகவே சாகும்’ என்று சொல்லப்பட்டவிதமாகவே மரித்தது. தேவனுக்கும் அவர்களுக்கும் இருந்த தொடர்பு அற்றுப்போயிற்று,ஆகவே அவர்களுடைய சந்ததியான நாமும் பாவத்தில் மரித்தவர்களாகவே பிறந்திருக்கிறோம். தேவனாகவே நம்மை உயிர்பித்தாலன்றி, நம்மை நாம் உயிர்பித்துக்கொள்ள ஒருகாலும் முடியாது.

            ஆண்டவராகிய இயேசுவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டபோது எவ்விதம் உயிர்பிக்கப்பட்டதோ, அதே வல்லமையைக் கொண்டு தேவன் நம்மையும் உயிர்ப்பித்திருக்கிறார். அப்படியானால் இந்த வல்லமை எவ்வளவு மேன்மையானது என்று பாருங்கள். அதே சமயத்தில் ஒரு மனிதனின் இரட்சிப்பில் எவ்வளவு பெரிதான தேவ செயல் காணப்படுகிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள். இது தேவனுடைய மகாபெரியதான இரக்கத்தால் ஒரு பாவிக்கு கொடுக்கப்படும் ஈவு. இதற்கு நம்மில் தகுதியென்று ஒன்றுமில்லை. தேவனே அவர் சித்தப்படி உயிர்ப்பிகிறார். இது தான் கிருபை என்பது.