கிருபை சத்திய தின தியானம் 

மார்ச்: 14                சுவிசேஷகனுடைய பாதங்கள்         ஏசா 52 : 1 – 15

“சமாதானத்தைக் கூறி, நற்செய்திகளை சுவிசேஷமாய் அறிவித்து,

இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரீகம்

பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய

பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன”(ஏசாயா. 52 : 7)

    தேவன் ராஜரீகம் பண்ணுகிறார் என்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகன்.’ தேவனுடைய ராஜரீகத்தை, அதிகமாய் ஒரு சுவிசேஷகன், ஊழியகாரன் பிரசங்கிக்கவேண்டும். இன்றைக்கு அநேக பிரசங்கங்கள் வெறும் மேலோட்டமான அளவில் பிரசங்கிக்கப்படுகிறது. அதாவது மனிதனுக்கு தேவன் வைத்தியராக, கடன் தொல்லைகளைத் தீர்க்கிறவராக, வெறும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறவராக மட்டுமே இன்று அதிகமான பிரசங்கங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் மெய்யான ஒரு ஊழியன் தேவனுடைய சர்வஏகாதிபத்தியத்தையும், சர்வத்தையும் ஆளுகிற தேவனின் ராஜரீகத்தையும் எப்போதும் மக்களுக்கு காண்பிக்கிறவனாய் இருப்பான்

    தேவனே அனைத்தையும் ஆளுகிறவர். வானம், பூமி, மனிதர்கள், தூதர்கள், பிசாசுகள் அனைத்தையும் ஆளுகிறவர் தேவனே. பூமி பிசாசுக்கு உரியதல்ல. தேவனே அதின் அதிபதி. பிசாசும் அவருடைய ஆளுகையின் கீழாகவே இருக்கிறான். அவன் தன்னிச்சையாக செயல்படமுடியாது. யோபுவைச் சோதித்த பொழுது தேவனுடைய அனுமதி பெற்றுதான் அவனால் சோதிக்க முடிந்தது. தேவாதி தேவனும், ராஜாதி ராஜனுமாய் அவர் இருக்கிறார். அவர் அனுமதியில்லாமல் ஒரு சிறு அடைக்கலான் குருவியும் கீழே வீழ்த்தப்படாது.

   ‘கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார்’ (யாத் 15 :18) இந்த தேவன் சதாகாலங்களுக்கும் தேவன். அவர் சதாகாலங்களிலும் ஆளுகைச்செய்கிறவர். அவர் செய்வதை தடுத்து நிறுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை. அவர் நித்திய திட்டத்தை, தீர்மானத்தை மாற்றியமைக்க எந்த ஒரு வல்லமையும் அதற்குத் தடையாக இருக்கமுடியாது. ‘தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.