“எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்” (உபாகமம் 26:9).

தேவன் தம்முடைய வார்த்தையின்படி நமக்கு இந்த அருமையான தேசத்தைக் கொடுத்திருக்கிறார் என்று மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லுகிறான். நம்முடைய வாழ்க்கையில் ஒரு காலத்தில் பாவத்தின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில், தேவன் தம்முடைய பலத்தக் கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், நம்மை அடிமைத்தனத்தில் இருந்தும் சாத்தானின் கரத்திலிருந்தும் விடுவித்து வழிநடத்தியிருக்கிறார். நம்முடைய வாழ்க்கைப் பிரயாணம் பல போராட்டங்கள் சோதனைகளை சந்திக்கும் ஒரு பிரயாணம். இந்த இடத்தில் மோசே முழுமையாய் கானான் தேசத்தை இன்னும் சுதந்தரிக்கவில்லை என்றாலும், எதிர்ப்பார்ப்போடு சொல்லுகிறான். நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் ஒன்றை நினைத்துக் கொள்ள வேண்டும், தேவன் நமக்கு கொடுக்கின்ற வெற்றி வரப்போகிற வெற்றிகளை நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக அவர் கொடுக்கின்ற வழிகாட்டி. நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மைக் கைவிட்டுவிட வில்லை. இனிமேலும் கைவிட்டு விட மாட்டார். ஆகவே நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆம் நம்முடைய வாழ்க்கையின் முடிவில் நித்தியமான  மகிமையுள்ள தேவ ராஜ்யத்தை அடையும்படியான காரியம் உண்டு. ஆனாலும் அதற்கு முன்பாகவே பல காரியங்களில் அதை அடைவதற்கான உறுதியை தேவன் கொடுத்து, ஒவ்வொரு நிகழ்விலும் நம்முடைய நம்பிக்கையை அவர் உறுதிப்படுத்தி வழிநடத்துகிறார். நிச்சயமாக தேவன் நம்மை முற்றும்முடிய இரட்சித்து தம்முடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ள கிருபை செய்வார்.