செப்டம்பர் 22
‘நமக்கு நியமித்திருக்கிற ஓட்டம்’ (எபி 12:1)
பொதுவாக இன்று உலகில் மனிதர்கள் மற்றவர்களைப் பார்த்து அவர்களைப்போல தங்கள் வாழ்க்கை அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். உலகப்பிரகாரமான சில மாதிரிகளை அமைத்துக் கொண்டு அவ்விதம் செயல்பட இன்று அநேகர் முயற்சிப்பது உண்டு. ஆனால் இது ஒரு கிறிஸ்தவனுக்கு பொருந்துமா?
ஆம்! இதைக்குறித்து சிந்திக்கவேண்டும். அப்படியானால் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையின் முழுமையான பயனை எவ்விதம் பெறுவது?
நாம் அறியவேண்டியது, தேவன் இந்த உலகில் எல்லார் மத்தியில் ஒவ்வொருவரையும் தனித்தன்மையோடு தெரிந்து கொண்டிருக்கிறார். உனக்கென்று தேவன் ஒரு பாதையை நியமித்திருக்கிறார். உலகில் ஒருவர் எல்லாவற்றிலும் மற்றவரைப் போல இருப்பதில்லை என்பது உண்மை. அவ்விதமாக ஒருவர் வாழ்க்கைப் பாதை மற்றொருவருடையதைப் போலவே இருக்காது.
இன்றைக்கு அநேகர் அநேக சமயங்களில் மற்றவர்களைப் பார்த்து எனக்கு அவ்விதமான வாழ்க்கை இல்லையே என்று ஏங்குவதுண்டு. அவ்விதம் எனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று மற்றவர்களைப் பார்த்து தன்னை சலித்துக்கொள்வதும் உண்டு. இது என்றும் உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் கீழாக உன்னை இழுத்துச்செல்லும். தேவனுடைய உன்னத திட்டத்திற்கு எதிர்த்து நிற்கிறவனாய் நீ காணப்படுவாய்.
தேவன் உனக்கென்று வைத்திருக்கிற பாதையை நீ ஏற்றுக்கொள். அது சோதனை நிறைந்த பாதையாக இருக்கலாம். அநேக சமயங்களில் நீ, வியாதி, குறைவு போராட்டங்கள் மத்தியில் கடந்துப் போகிற பாதையாக இருக்கலாம். ஆனாலும் அவைகளைக் குறித்து முறுமுறுக்காதே. அவைகளுக்காக தேவனைத் துதி. அவைகளின் மத்தியில் கடந்துப போக தேவனிடத்தில் கிருபையைக் கேள். தேவன் உன்னை சாட்சியாக நிலை நிறுத்துவார். உன்னுடைய வாழ்க்கை தேவனுக்கு மகிமையாக இருக்கும். இந்த பாதையில் நீ நன்றாய் ஓட உனக்கு பொறுமை தேவை என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே.