ஏப்ரல் 1

“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை” (ஆபகூக் 2:3).

குறித்த காலத்துக்கு தேவன் தம்முடைய திட்டத்தையும், நோக்கத்தையும் வைத்திருக்கிறார். இந்த இடத்தில் தரிசனம் என்று சொல்லும்பொழுது நாம் ஒருவேளை இந்த காலத்தில் அநேகர் தரிசனம் காண்பதைக் குறிக்கிறதா? இல்லை. தேவன் இந்த நாட்களில் தரிசனத்தை கொடுப்பதில்லை. அதனுடைய அவசியம் இன்றைக்கு தேவையில்லை. வேதம் போதுமானது. வேதத்தின் மூலம் நம்முடைய ஆவிக்குரிய தேவைகள் எல்லாம் முழுமையாகச் சந்திக்கிறார்.  ‘நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்’ என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஆண்டவர் நம் வாழ்க்கையில் கொண்டிருக்கிற திட்டத்தை  நிச்சயமாக நிறைவேற்றுவார். அது அவருடைய காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது. ஆகவே தரிசனம் மூலம் தேவன் பேசவேண்டிய அவசியமில்லை.அநேகர் தரிசனம் என்ற பெயரில் ஏமாந்து போகிறார்கள்.சிலர் பிசாசினால் வஞ்சிக்கப்படுவதும் உண்டு

தேவன் ஒருக்காலும் பொய் சொல்லுவது இல்லை. ஆகவே அது தாமதித்தாலும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் சோர்ந்து போகாதீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் தம்முடைய திட்டத்தின்படி, செம்மையான வழியில் நிறைவேற்றும் படியாக செயல்படுவார். ஆகவே நீங்கள் அதற்காக காத்திருக்க வேண்டும். அமைதியாய் தேவனுடைய காலத்துக்கும், நேரத்துக்கும் ஒப்புக்கொடுத்து நீங்கள் வாழ வேண்டும். தேவன் உங்கள் வாழ்க்கையில் ஏற்றவேளையில்  உண்மையான விடுதலையை கொடுக்கிறவராக இருக்கிறார். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீங்கள் ஜாக்கிரதையோடு விழித்திருக்கவேண்டும். நாம் வழிவிலகிப் போக அநேக வழிகள் உண்டு, ஆனால் அதையெல்லாம் தாண்டி தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்பொழுது தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கிற காரியங்களை ஏற்ற வகையில் நேர்த்தியாக செய்து முடிப்பார்.