கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 15              முதலாவது தேவனுடைய ராஜ்யம்        மத்தேயு 6:25-34

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்

அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத் 6:33)

 

     முதலாவது தேவனுடைய ராஜ்யம். இச்சூத்திரத்தை ஒருக்காலும் மாற்றமுடியாது. இதுவே ஒரு கிறிஸ்தவனுக்கு அடிபடை தத்துவம். அநேகருக்கு இது முதலாவது அல்ல ‘கடைசியாக’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. இதுதான் உன்னுடைய பிரச்சனை. நீ மற்றவைகள் எல்லாவற்றையும் முதலாவது வைத்து தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் கடைசியாக வைத்துள்ளாய். ஆகவேதான் நீ மெய்யான ஆசீர்வாதத்தைப் பார்க்க முடிவதில்லை. நீ என்ன சம்பாதித்தாலும் பொத்தல் பையில் போடுவது போல் அவைகள் உனக்கு ஆசீர்வாதமாய் இருப்பதில்லை. அப்படி மீறி அநேகப் பொருட்களையும், பணத்தையும் சேர்த்தாலும் உனக்கு மெய்யாய் பிரயோஜனப் படுவதில்லை.

     சகோதரனே! சகோதரியே! நீ முதலாவது தேவனை, தேவனுடைய காரியங்களைத் தேடாததைக் குறித்து வருந்துகிறாயா? வேதனைபடுகிறாயா? அல்லது அதைப்பற்றி பரவாயில்லை என்று எண்ணுகிறாயா? எப்போதும் தேவன் கொடுக்கும் ஆசீர்வாதத்திற்காக வாஞ்சி. தேவன் கொடுப்பாரானால் அதோடு வேதனையையும் கூட்ட மாட்டார்  என்று வேதம் சொல்லுகிறது. அதில் நிறைவு இருக்கும். அது உனக்கு மட்டுமல்ல உன் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.

     தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது வைத்துப்பார். தேவன் உனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து அதோடுகூட தம்முடைய அளவில்லாத சமாதானத்தையும் கொடுப்பதை நீ காணமுடியும். சாத்தான் சொல்லும் பொய்யை நம்பாதே. அவன் நீ அப்படி வாழ்வது கஷ்டம் என்று சொல்லுவான். அவனுக்கு இடங்கொடாதே. தேவனுடைய ஆலயங்களில் கூட்டங்கள் எல்லாவற்றிலும் ஒழுங்காக கலந்துக் கொள்வதிலும், தேவனுக்குக் கொடுப்பதிலும், ஜெபிப்பதிலும், அவருடைய காரியங்களை நேசிப்பதிலும், அதற்காக உழைப்பதிலும் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதிலும் முன்னேறு. தேவன் ஒருக்காலும் பொய் சொல்லுகிறதில்லை.