கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 4                    ஆதி அன்பு                     வெளி 2:1–10

‘நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று

உன்பேரில் எனக்கு குறை உண்டு.

ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை

நினைத்து மனந்திரும்பு’ (வெளி 2 :4 ,5)

    இது எபேசு சபை நிலை மாத்திரமல்ல, இன்று ஒரு வேளை உன்னுடய நிலைமையும் இவ்விதமாகவே இருக்கிறது  ஆரம்ப நாட்களில் வேதத்தை வாசிப்பதும், ஜெபிப்பதும், தேவனுடைய ஆலயத்திற்கு போவதும், தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தை தேடுவதும் உனக்கு மிகவும் பிடித்தமான காரியங்களாய் இருந்தன. ஆனால் இன்றோ, இவைகளில் உனக்கு விருப்பம் இல்லாதது மட்டுமல்ல, இவைகளை நீ புறக்கணிக்கிறாய். இன்று அநேகர் இவ்விதம் ஜீவிக்கிறார்கள்.

    சகோதரனே! சகோதரியே! இன்று நீ எவ்வளவாய் ஆவியில் குளிர்ந்து போயிருக்கிறாய் என்பதை எண்ணிப்பார். இதைக்குறித்து உண்மையிலேயே வருத்தப்படுகிறதில்லையா? இதினிமித்தம் நீ சமாதானமற்ற நிலையில் அலைந்து திரிகிறாய். உலக ஆசையினால் பீடிக்கப்பட்டு ‘நான் எதை பெற்றுக்கொள்ளுவேன், என்னத்தை நான் சம்பாதிப்பேன்’ என்று உலக ஆசையும், உலகக் கவலையும் நிறைந்து, உலகப்பிரியனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். ஆனால் தேவன் உன்னைப் பார்த்து ‘மனந்திரும்பு’ என்று அழைக்கிறார்.

    இந்த மனந்திரும்புதல் எவ்விதம் இருக்கவேண்டும் என்று தேவன் கூறுகிறார். இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பு. நீ மனந்திரும்பும்போது, தாவீதைபோல் தேவனை நோக்கி ஜெபி. வேதனை உண்டாக்குகிற வழிகள் என்னிடத்தில் உண்டோ என்று ஆராய்ந்து பார்த்தருளும்’ என்று ஜெபி. பாவம் எப்போதும் உனக்கு இழுக்கு என்பதை எண்ணிப்பார். தேவனிடத்தில் இரக்கத்தைப்பெற வழி என்ன? பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28:13) நாம் தினமும் நம்முடைய பாவங்களை உணர்ந்து அதை தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு சரி செய்துகொள்வோம் என்றால் பிற்காலத்தில் பெரிதான ஆவிக்குரிய வீழ்ச்சியிலிருந்து காக்கப்படுவோம். தேவனோடு உள்ள உறவைப் புதுப்பிப்போம்.