“ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்” (யோவான் 2:7).

கானா ஊர் கலியாணத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அங்கு திராட்ச ரசம் இல்லாதபொழுது அவர்களுக்குத் திராட்ச ரசம் கொடுக்கும்படியாகச் இவ்விதம் சொன்னார். ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்று சொன்னார். தண்ணீர் ஒரு அற்பமானது தான். ஆனால் ஆண்டவர் ஜாடிகளை தண்ணீர்களால் நிரப்பச் சொன்னார். ஏனென்றால் அவர் அதைத் திராட்ச ரசமாக மாற்றப் போகிறார். ஆண்டவருடைய மகிமை எப்பொழுதுமே அற்பமானவைகளை மகிமையானவைகளாய் மாற்றுவதே. மனிதனுடைய வாழ்க்கையிலும் அதையே செய்கிறார். அற்பமான ஒரு மனிதனை மகிமைகரமாக மாற்றுகிறார். வீணாய்ப் போன ஒரு மனிதனை பிரயோஜனமானவனாய் மாற்றுகிறார். எல்லாமே தேவனுடைய உன்னதமான ஒரு செயல். எளியவைகளைக் கொண்டு ஆண்டவர் செய்யக்கூடிய அவருடைய மகத்துவத்தை விளங்கப்பண்ணுகிறார். இதுவே தேவன் செய்யக்கூடிய உன்னதமான காரியம். நம்முடைய வாழ்க்கையில் நாம் அற்பமாக எண்ணப்படலாம். ஆனால் கர்த்தருடைய கரங்களில் நம்மை ஒப்புக்கொடுக்கும்பொழுது ஆண்டவர் அதை மகிமைகரமாக மாற்றுகிறார். மனிதர்களிடத்தில் நாம் புகழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போமானால் அது தவறு. ஆனால் தேவனிடத்தில் நாம் புகழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் இந்தக் காரியத்தைச் செய்கிறார். அநேகர் இந்த உலக மனிதர்கள் பார்வையில் தாங்கள் உயர்வாய்க் காணப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெபிக்கின்றார்கள். ஆனால் அந்த ஜெபம் தேவனால் கேட்கப்படுவதில்லை. அவர் நம்முடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். ஆண்டவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.