ஜனவரி 27                     

“உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்” (ஏசாயா 41:12).

      தேவனுடைய ஜனங்களுக்கு எதிராக ஒருவரும் நிற்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். உன்னோடு இப்பொழுது அவர்கள் போராடுகிறார்கள், ஆனால் சிறிதுகாலம் சென்றபிறகு அவர்களை நீங்கள் தேடும்பொழுது இருக்கமாட்டார்கள். ஏனென்று கேட்டால் கர்த்தர் உன்னோடே இருக்கிறார். கடவுள் ஒரு மனிதனோடு இருக்கும்பொழுது, அவனுக்கு எதிராக தோன்றும் சிந்தனைகளும், திட்டங்களும், சதி செயல்களும் நிலைநிற்காது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற விசுவாசம் நமக்கு இல்லையென்றால் நம்மோடு போராடும் மனிதர்களோடு போராடி சோர்ந்து பெலனற்றுக் காணப்படுவோம். அநேகர் தேவன் நம்மோடு இருக்கிறார் என்கிற விசுவாசமும் நம்பிக்கையும் இல்லாததினால், தங்கள் சுய சிந்தனையோடு சுய ஞானத்தோடு சுய அறிவைக் கொண்டு தங்களுக்கு எதிராக ஏற்படுகிற காரியங்களைச் சந்திக்கிறார்கள். அப்பொழுது போராட முடியாமல் மனம் தளர்ந்து போகிறார்கள்.

      கர்த்தர்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று சொல்லுகிறார். கர்த்தர் நம்மோடு இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையின் போராட்டங்கள் பாடுகள் மத்தியில் கடந்து செல்லும் பொழுதும் நாம் திகைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் கர்த்தர் நம்மோடு இருந்து நம்மைப் பாதுகாக்கிறவராகவும் வழி நடத்துகிறவராகவும் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று சொல்லுகிறார். கிருபையுள்ள தேவன் தம்முடைய பிள்ளைகளை முடிவு மட்டுமாக தாங்கி வழிநடத்தி பாதுகாக்கிறவராக இருக்கிறார். ஆகவேதான் கர்த்தர்: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” (ஏசாயா 54:17) என்று சொல்லுகிறார். இப்படிப்பட்ட மகத்துவமுள்ள தேவனை நாம் சார்ந்துகொள்வோமாக.