ஜூன் 14
“யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து” (2 நாளா 18:1).
யோசபாத் ஒரு தேவ மனிதன். ஆனால் அவன் தேவனுக்குப் பயப்படாத ஆகாபோடே சம்பந்தம் கலந்தான் என்று பார்க்கிறோம். அந்த ஆகாப் பாகாலைத் தெய்வமாகக் கொண்டவன். அவனுடைய நட்பு ஆண்டவருக்கு பிரியமில்லாத ஒரு காரியம். யோசபாத் தன்னுடைய மகனுக்கு ஆகாபின் மகளைத் தெரிந்து கொள்வதைப் பார்க்கிறோம். இன்றைக்கு தேவனுடைய ஜனங்கள் எவ்விதமான தொடர்புடைய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது மிக அவசியமானதாகும். ஒரு விசுவாசி அவிசுவாசியோடு சம்பந்த கலப்பது மிகப் பெரியத் துரோகம். ஆனால் இந்த இடத்தில் யோசபாத் அதைத் தெரிந்து கொண்டான். அது கர்த்தருக்கு அருவருப்பாக இருந்தது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் யாரோடு நெருக்கமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நீங்கள் தேவனை அறியாத மக்களோடு கூட அதிகமான நட்பு கொண்டிருப்பீர்களானால், அது கர்த்தருக்கு அருவறுப்பானது.
தேவனை அறியாத மக்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பது உண்மைதான். நட்பு கொள்ளலாம், ஆனால் அவர்களோடு ஐக்கியம் என்பது வேதத்திற்குப் புறம்பானது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஆண்டவரை விட்டு வழி விலகிப்போக, அது உங்களை வழிநடத்தும். தேவனை அறியாத மக்களை நாம் நேசிக்கவேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவைக் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களோடு நாம் நெருங்கிய உறவு கொண்டுவாழ்வது, ஆண்டவருடைய வார்த்தைக்கு ஏற்புடையதல்ல. விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் தொடர்பு இல்லை என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் ஐக்கியம் என்பது மிக முக்கியமானது. நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவபிள்ளைகளோடு தொடர்புகொள்ளும் போது நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்வதற்கும், அவர்களோடு ஒருமைப்படுத்துவதற்கும் ஏற்ற சூழலாக இருக்கும். ஆண்டவரை அறியாத மக்களோடு நாம் அதிகமான தொடர்பு கொள்ளும்பொழுது, ஆண்டவரைக் குறித்து நாம் பேசாமல் உலகப்பிரகாரமான பல காரியங்களை குறித்து நாம் பேசிக்கொண்டிருப்போம். நற்சாட்சிகளை இழந்துபோவோம் என்பதை நினைவில் கொள்வோமாக.