“அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று” (லூக்கா 16:21).

லாசருவின் வாழ்க்கையைப் பார்க்கும்பொழுது அவன் ஒவ்வொரு வேளையும் தன் பசியை ஆற்றும்படியாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தான். ஒருவேளை அவன் ஒவ்வொரு வேளையும் தேவனிடத்தில் ஜெபித்துக் காத்திருந்திருப்பான். அவன் ஐஸ்வரியவானுடைய மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான். அந்த வேளைகளில் நாய்களும் அவன் பருக்களை நக்கிற்று என்று பார்க்கிறோம். ஆனால் இவ்விதமான ஒரு பரிதாபமான நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த மனிதனுக்கு தேவன் ஒரு பெரிய ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுவார் என்பதற்கு எந்தவிதமான சாத்தியமும் இல்லாததைப் போலக் காணப்பட்டது. அந்த வழியாய்க் கடந்துபோன மக்கள் அந்த மனிதனைப் பார்த்து பரிதாபப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவன் தேவனோடு உறவுகொண்டிருந்த ஒரு மனிதன். என்ன ஒரு அருமையான ஆவிக்குரிய வாழ்க்கை! நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறு கஷ்டம் வந்தாலும் ஆம் முறுமுறுக்கிறோம். ஆனால் மெய்யான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொள்ளுவோம். இந்த அநித்தியமான உலகத்தின் தேவைகள் நம்மை முறுமுறுக்கச் செய்யத் தேவையில்லை. அவைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நன்மைகள் என்று எண்ணுவோம். லாசருவிற்கு மனித உறவுகள் இல்லையென்றாலும், நாய்கள் அவனுக்கு நல்ல நண்பர்களாக இருந்திருக்கக் கூடும். தேவன் நம்முடைய வாழ்க்கையின் தேவைகளில், யாரை அனுப்பி நம்மை சந்தோஷத்தோடு வைக்கக் கூடும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.