“தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்” சங்கீதம் 49:11

      மனிதனுடைய உள்ளத்தின் அபிப்பிராயம் எவ்வளவு தவறானது என்பதை நாம் இங்கு பார்க்கிறோம். அவனுக்கும் அது தெரியாமல் இல்லை. அவனுடைய வாழ்க்கையில் அவன் சம்பாதிப்பது என்றென்றும் இருப்பதைப் போன்ற உணர்வோடு வாழுகிறான். அதற்காக அவன் அதிகமாய் பிரயாசப்பட்டு, பாடுபட்டு, எல்லாவற்றையும் சேர்த்து வைக்கிறான். அவன் இருதயம் அதைப் போன்ற ஒரு உணர்வு கொண்டதாகவே இருக்கிறது. ஆனால் அது சரியா?

      “ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்” (சங்கீதம் 49:12-13) என்று வேதம் சொல்லுகிறது. ‘அவன் கனம்பொருந்திய மனுஷனாயிருந்தும் நிலைத்திருக்கிறதில்லை’. இந்த உலகத்தின் வழி எவ்வளவு தவறானது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

      வேதம் மனிதனை மிகக் கடுமையாக இரண்டு பதங்களில்  குறிப்பிடுகிறது. ஒன்று அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இன்னொன்று அவன் பைத்தியக்காரன். மனிதன் ஒரு பைத்தியக்காரன் என்பதாகவே வேதம் சொல்லுகிறது. புத்திசாலி என்பவன் வேதத்தை ஆராய்ந்து,  அதனடிப்படையில் வாழ்வினைக் கட்டுகிறவன். புத்திசாலி வரப்போகிற வாழ்க்கை நித்தியமானது என்பதை உணர்ந்தவன். ஒருவேளை நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திப்பது அவசியமானது. தேவன் நம்முடைய நிலையை நமக்கு உணர்த்துவது மிக பிரயோஜனமாக இருக்கும்.