பிப்ரவரி 2 பயம் வேதனையுள்ளது 1 யோவான் 4:7-21
“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1யோவான் 4:18).
பயம் என்பது மனித வாழ்க்கையில் ஒரு கொடூரமானது என்று கூட சொல்லலாம். இந்த பயம் என்பது எப்படி உண்டானது? ஆதாம்-ஏவாள் பாவம் செய்த பொழுது அவர்கள் தேவனுக்கு பயந்து போய் ஒளிந்துகொண்டார்கள். அது தேவ பயமில்லை, குற்றமுள்ள உணர்வோடு கூடிய பயத்தினால் மனச்சாட்சியில் சூடுண்ட நிலையில் போய் ஒளிந்துகொண்டார்கள் . அப்பொழுது மனிதன் பாவத்தின் உணர்வோடும், பாவத்தின் தன்மையோடும் பயம் என்ற ஒரு உணர்வையும் பெற்றான். அது ஆதாம்-ஏவாள் மூலமாக நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரம். ஆனால் தேவனுடைய அன்பை நாம் விளங்கிக் கொள்ளும்பொழுது இந்த பயம் நீக்கப்படுகிறது. ஆகவேதான் ‘பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்’ என்று வேதம் சொல்லுகிறது.
தேவனுடைய பூரணமான அன்பை நாம் உணர்ந்து அதன் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையில் நாம் வாழும் வழிமுறையைத் தெரிந்து கொள்ளும்பொழுது அந்த பயமானது புறம்பே தள்ளப்படும். ஆகவே அவருடைய அன்பை நாம் சார்ந்து கொள்ளுவோம். இன்னொன்று பயமானது வேதனை உள்ளது என்று வேதம் சொல்லுகிறது. வருத்தத்தையும், வேதனையையும் மனுஷனுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடியது பயம். ஆனால் மெய்யான இரட்சிப்பில் இருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம் பயத்தை ஆண்டவர் நம்முடைய இருதயத்தில் இருந்து எடுத்துப் போடுகிறார். பயம் என்கிற கொடுமையான உணர்வை நம்மில் நீக்குவதே இரட்சிப்பின் உன்னதமான ஒரு சிலாக்கியம்.
உலக மனிதர்கள் எவ்வளவுதான் இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தாலும், அதோடு கூட பயம் என்கிற உணர்வையும் கொண்டவர்களாக வாழுகிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த பயம், தங்களுடைய நிச்சயமற்ற வாழ்க்கை குறித்த பயம் அவர்களை ஆட்கொள்கிறது. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் தேவனைத் தவிர வேறொன்றிற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.