ஏப்ரல் 24       

“நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்” (எரேமியா 42:11-12).

இஸ்ரவேலர் பாபிலோன் ராஜாவுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் மிகப்பெரிய பலசாலியான ராஜா. அவனுடைய வல்லமை மிகப் பெரியது. ஆம் நாமும் அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் நம்மைவிட எதிரிகள் வல்லமை உள்ளவர்களாக, அதிக பலசாலிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது பயப்படுகிறோம். நம்முடைய சூழ்நிலைகள் அநேக சமயங்களில் நம்முடைய பலத்துக்கு மிஞ்சினதாய் காணப்படுகிறது. அதனால் பயப்படுகிறோம். ஆனாலும்கூட ஆண்டவர் சொல்லுகிறார், ‘பயப்படவேண்டாம்’. ஏனென்றால் ஆண்டவர் உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்கு தப்புவிக்கும் படிக்கும், ‘நான் உங்களுடனேகூட இருந்து’ என்று சொல்லுகிறார். ஆண்டவர் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் நம்மை ரட்சிக்க முடியும். எந்த ஒரு பிரச்சனைக்கும் நம்மை தப்பிவிக்க முடியும்.

இந்த மகா பெரிய தேவன் நம்மோடுகூட இருக்கிறேன் என்று வாக்குப்பண்ணியிருப்பது எவ்வளவு மகிமையான காரியம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 1:19). உனக்கு விரோதமாக எழுப்பும்  போராட்டங்கள்,  பலவிதமான நெருக்கங்கள் மத்தியில் கடந்துபோகிற வேளைகள் உண்டு. ஆனாலும் நாம் தைரியமாக இருப்போம். ஏனென்று கேட்டால் போராட்டம் உண்டு ஆனாலும் அவர்கள் உங்களை மேற்கொள்ள நான் விடமாட்டேன் என்று தேவன் சொல்லுகிறார். அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாய் சொல்லுகிறார். அவர் உறுதியாய் சொல்லுவதால் நிச்சயமாக நாம் அதை நம்பி, விசுவாசித்து செயல்படுவோமாக.

மேலும் நமக்கு கர்த்தர் இந்த நிலையில் இரக்கம் செய்கிறேன் என்று சொல்லுகிறபடியால் நாம் கர்த்தருடைய இரக்கத்தைச் சார்ந்து வாழ்வோமாக அப்பொழுது கர்த்தருடைய உதவியை நாம் காணமுடியும்.