“பயப்படாதே நான் உன்னோடே இருக்கிறேன்” (ஏசாயா 43:5).

தேவன் அநேக முறைகள் இந்த வேதத்தில் நமக்கு கொடுக்கும்படியான ஆறுதலின் வார்த்தை “பயப்படாதே”. ஆதாம் ஏவாள் எப்பொழுது பாவம் செய்தார்களோ அவர்கள் மூலமாய் நம்மெல்லாருடைய வாழ்க்கையிலும் பயம் என்ற காரியம் உட்பிரவேசித்துவிட்டது. ஆம், ஆதாம் ஏவாள் பாவம் செய்தபொழுது அவர்கள் பயந்து தங்களை ஒளித்துக்கொண்டார்கள். மனிதனுடைய வாழ்க்கையில் பயம் என்பது பாவத்தோடு இணைந்ததாக இருக்கிறது. மனிதன் பாவத்தினால் பாதிக்கப்பட்டவிதமாகவே பயத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் நாம் இதிலிருந்து விடுதலையாக்கப்படுகிற வழிமுறை என்ன? பயப்படாதே நான் உன்னோடே இருக்கிறேன் என்று தேவன் சொல்லுகிறார். ஆதாம் ஏவாள் பாவம் செய்தபொழுது அவர்கள் தேவனை விட்டு விலகிப் போனார்கள். ஆனால் மெய்யான இரட்சிப்பும் மனம்திரும்புதலும் நம்முடைய வாழ்க்கையில் மறுபடியுமாக தேவனோடு நம்மை இணைக்கிறது. இந்த இணைப்பின் மூலம் நாம் பெறுகிற சிலாக்கியம் தேவன் என்னோடு கூட இருக்கிறார். நான் பயப்படவேண்டிய அவசியமில்லை என்பதே. “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (சங்கீதம் 23:4). ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையில் இருக்கிற மிகப்பெரிய நம்பிக்கை என்னவென்றால், தேவன் என்னோடுகூட இருக்கிறார். அவர் எனக்கு முன்பாக நடந்துசென்று என்னை வழிநடத்துகிறார் என்பதே. என்ன ஒரு அருமையான நம்பிக்கையை தேவன் கொடுக்கிறார்! இதைப் போன்ற நம்பிக்கையும் தைரியமும் இந்த உலகத்தின் காரியங்களினால் நாம் கண்டுகொள்ளமுடியுமா? இல்லை. மெய்யான இந்த சத்தியம் நம்முடைய இருதயத்தை தைரியப்படுத்தட்டும். பெலப்படுத்தட்டும். நமக்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த கர்த்தர் நம்மோடு இருக்கிறார். இந்த ஆசீர்வாதம் தேவனுடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது.