செப்டம்பர்  10            

‘ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.’ (மத்தேயு, 10 : 29 )

மிகச்சிறிய காரியங்களிலும் தேவனுடைய ஆளுகையிருக்கிறது என்பதை வேதம் தெளிவாகப் போதிக்கிறது. அவர் அறியாமல் எந்த ஒரு சிறு காரியமும் நடைபெறாது. அவருடைய ஆளுகையில்லாத ஒரு சிறிய இடத்தையும் நாம் சொல்லமுடியாது. அவரே எங்கும் வியாபித்திருக்கிறவர். வானம் அவருக்கு சிங்காசனம், பூமி அவருடைய பாதப்படி, அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. மிகவும் அற்பமாய் எண்ணப்படுகிற அடைக்கலான் குருவியைப் பாருங்கள். அவைகள் எவ்வளவு அற்பமானவைகள் என்றால் ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகள் கிடைக்கும். ஆனால் அவைகளில் ஒன்றையாகிலும் தேவனுடைய சித்தமில்லாமல் எந்த ஒரு மனிதனும் வீழ்த்தமுடியாது. ஒரு வேடன் அதை வேட்டையாடி சுட்டாலும், அம்பு எய்து வீழ்த்தினாலும், அதிலும் தேவனுடைய சித்தம் இருக்கிறது. மிகச்சிறிய காரியங்களிலும் தேவனுடைய சர்வ ஆளுகையை அங்கீகரிக்கும்பொழுது தேவனை நாம் மகிமைப்படுத்துகிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற மிகச்சிறிய காரியத்திலும் தேவனுடைய சித்தம் இருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.

‘மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்’ (சங்கீதம் 50 : 11) என்று கர்த்தர் சொல்லுகிறார். உலகில் எத்தனையோ மலைகள் இருக்கின்றன. அவைகளில் உள்ள பறவைகள் எல்லாவற்றையும் தேவன் அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். தேவனுடைய இந்தவிதமான ஞானம் அற்பமனிதர்களாகிய நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது. ஆனால் இவைகளை எண்ணி, இவ்விதமான ஞானத்தைக் கொண்டுள்ள தேவனை துதிப்போமாக.

இவ்விதமான சர்வஞானம் நமக்கு எவ்விதம் பொருந்துகிறது? தேவன் அறியாமல் நம்முடைய வாழ்க்கையில் மிகச்சிறிய காரியமானாலும் நடைபெறாது என்ற அறிவு நம்மை வாழ்க்கையின் ஒவ்வொரு ஏமாற்றங்களிலும், தோல்விகளிலும், கஷ்டங்களிலும் நம்மை ஆறுதல்படுத்தட்டும். .