டிசம்பர் 30                        

ஒருவன் என் பிதாவின் அருளை பெறாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்  (யோவான் 6 : 65)

       ஏன் ஆண்டவராகிய இயேசு இவ்விதம் சொல்லவேண்டும்? வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே !நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்’ என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். ஆனாலும் இங்கே இவ்விதமாகவும் சொல்லியிருக்கிறார். இதைக்குறித்து நாம் சிந்திக்கவேண்டும். ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் வருவது அவரவர்களிடம்தானே இருக்கிறது என்று யோசிக்கலாம். இன்றைக்கு அநேக கூட்டங்களில் அவ்விதமாகவே இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் முன்வரும்படி அழைக்கப்படுகிறார்கள். அப்படி அவர்களாகவே இயேசுவை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் தீர்மானிக்க முடியவில்லையென்றால் மேலே சொல்லப்பட்ட வசனம் எப்படி பொருந்தும்?

     இதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்று நாம் பார்ப்போம். ஆதாம், ஏவாள் தேவனுக்குக் கீழ்படியாமல் போனபோது நடந்தது என்ன? மனிதனின் சித்தமும், தெரிந்துக்கொள்ளுதலும் திறமையும் பாவத்திற்கு அடிமைபட்டுப் போயிற்று. ஆகவே அவன் நீதியைத் தேடமுடியாதவனாய்ப் போனான். அவன் இயற்கையாகவே பாவத்தையே, பாவ வழியையே தெரிந்துக்கொள்ளுகிறவனானான். ஆகவே அவனாகவே இயேசுவை அவருடைய மரணத்தின்மூலம் கிடைக்கும் மீட்பை ஏற்றுக்கொள்ளமுடியாதவனாய்ப் போனான்.

     இவ்விதமான மனிதனில் தான் தேவன் தம்முடைய வல்லமையைக் கொண்டு செயல்படுகிறார். தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலம் உயிர்ப்பிக்கிறார். ஆகவே தேவனின் அருள், அதாவது கிருபை கொடுக்கப்படாவிட்டால் அவன் இயேசுவினிடத்தில் ஒருகாலும் வரமுடியாது. அன்பானவர்களே! உன் இரட்சிப்பை நீ நோக்கிப் பார்ப்பாயானால் நீ தேவனிடத்தில் எப்படி வந்தாய் என்பதை விளங்கிக் கொள்ளமுடியும். ’ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உன்னில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார் ‘என்று சொன்னபடி தேவனே உன்னில்  கிரியை செய்ததை உணரமுடிகிறதா? ஆகவேதான் இந்த இரட்சிப்பு உனக்கு கர்த்தருடைய கிருபையால் அளிக்கப் பட்டிருக்கிறது.