அக்டோபர் 2
நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால் அப்பா, பிதாவே!என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். (கலாத்தியர் 4:6)
ஒரு கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற உன்னதமான சிலாக்கியம் இது. பொதுவாக ஒரு உலகப்பிரகாரமான தகப்பனுக்கும் அவருடைய பிள்ளைக்கும் இருக்கும் உறவை, உரிமையைப் பாருங்கள். தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்காக எவ்விதம் உழைக்கிறான், பாடுபடுகிறான். அவர்களுடைய முன்னேற்றத்தை அவனே அதிகம் விரும்புகிறவன். ஒரு பிள்ளையும், அவ்விதமாகவே தன்னுடைய தகப்பனை எவ்வளவாய் சார்ந்திருக்கிறது. தன்னுடைய தேவைகளுக்காக பாதுகாப்பிற்காக, மற்றும் அனைத்திற்கும் தன்னுடைய தகப்பனை முழுமையாய் சார்ந்து தகப்பனுடைய பராமரிப்பை முற்றிலும் நம்புகிறது.
அவ்விதமாகவே, ஒரு தேவனுடைய பிள்ளை பிதாவாகிய தேவனை அண்டிக்கொள்ள வேண்டும். பிதாவுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவும், ஐக்கியமும், நம்பிக்கையும் எவ்வளவோ, அந்த அளவுக்கு தேவனுக்கும் தேவனுடைய பிள்ளைக்கும் இருக்கும்படியாகவே, தமது குமாரனுடைய ஆவியை நமது உள்ளங்களில் அனுப்பியிருக்கிறார். ஒரு பிள்ளை தன்னுடைய தேவைகளைக் கேட்க யாரிடத்தில் போவான்? தன்னுடைய தகப்பனிடத்தில்தான் போவான். அது மாத்திரமல்ல அவன் நன்மையையே அந்தத் தகப்பன் விரும்புகிறவரானபடியால், அவன் தான் கேட்பதைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடே செல்லுவான். அதே விதமாக நாமும் ஜெபத்தில் நம்முடைய தேவைகள் அனைத்திற்காகவும் தேவனிடத்தில் செல்லவேண்டும். அது ஏதுவாயிருந்தாலும், எப்படிபட்டதாயிருந்தாலும் நம்முடைய நித்திய பிதாவினிடத்தில் செல்லுவோம். அவர் பரிவோடு நம்மைப் பார்க்கிறவர். நம்முடைய எல்லாக் காரியங்களையும் அனுதாபத்தோடு காண்கிறவர். அவர் நமக்கு உதவி செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? அவரிடத்தில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவோம். மேலும் வேதம் என்ன சொல்லுகிறது? “நீங்கள் எவைகளை ஜெபத்தில் கேட்கிறீர்களோ அவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசியுங்கள்.” ஆம்! அவ்விதமான நம்பிக்கையோடு தேவனிடத்தில் சேருவோம். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக்கோபு 4:8)