“நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்” (எஸ்தர் 4:16).

இந்த இடத்தில் எஸ்தருடைய விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் நாம் பார்க்கிறோம். அவள் தனக்காக ஜெபிக்கும்படியாக கேட்கிறாள். நமக்காக மற்றவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று கேட்பது நல்ல காரியம். தாழ்மையோடும் கர்த்தர் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் இவ்விதமாய் நாம் கேட்க வேண்டும். பவுலும்கூட தனக்காக ஜெபிக்கும்படி கேட்கிறதை நாம் பார்க்கிறோம். எஸ்தர் தனக்காக ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுகிறது மாத்திரமல்ல, அவளும் தன் தாதிமார்களும் உபவாசம் பண்ணுவோம் என்று சொல்லுகிறாள். ஒரு அந்நிய தேசத்தில் எஸ்தர், தன் தாதி மார்களையும் ஆண்டவரை விசுவாசிக்கக்கூடிய விசுவாசத்தில் வழிநடத்தியிருக்கக் கூடும். ஆகவேதான் அவர்களோடு அவள் சேர்ந்து ஜெபிக்கக் கூடிய காரியத்தைக் குறித்துப் பேசுகிறாள். நாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாரையும் ஆண்டவருக்குள் வழிநடத்த நாம் பிரயாசப்படுவது எவ்வளவு அவசியம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மேலும் ஆண்டவருடைய காரியத்தின் நிமித்தம், எஸ்தர் தன்னுடைய ஜீவனையும் ஒப்புக்கொடுத்து ஆண்டவருடைய சித்தத்தின்படி நடக்கும் என்று அவள் பேசுகிறதை நாம் பார்க்கிறோம். அவள் தன்னுடைய வாழ்க்கையில் ஆண்டவருக்காக வாஞ்சையும், வைராக்கியமும், ஒப்புக்கொடுத்தலையும் வெளிப்படுத்தினாள். மேலும் தேவனுடைய ஒத்தாசை இல்லை என்றால் அதனைத் தான் செய்ய முடியாது என்று அறிந்த நிலையில் ஜெபத்தோடு அவள் எண்ணி செயல்பட்டாள். இவ்விதமான ஆவிக்குரிய நற்குணங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்பொழுது எஸ்தரைப் போல நாமும் வெற்றிகொள்ளுவோம்.