நவம்பர் 15 

“சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்” (நீதி 17:1).

      இன்றைக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் கர்த்தருக்குள்ளான அமைதியான வாழ்க்கையை வாழ தவறுகிறார்கள். வீடு நிறைய பொருட்கள் காணப்பட வேண்டுமென்றும், கொழுமையான பதார்த்தங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஆனால் அதில் எவ்விதம் அதை அனுபவிக்கிறார்கள் என்று பார்ப்பது நலம். கிறிஸ்தவர்கள் அதிகமாக உலகத்தை நாடி போவதென்பது விசாலமான வாசலுக்கு போகிறார்கள் என்று பொருள்.  மேலும் அதின் முடிவை சிறிதும் எண்ணிப்பார்ப்பதில்லை. இன்னுமாக அதில் மெய்யான சமாதானத்தை இழக்கிறார்கள். ஆவிக்குரிய காரியங்களில் வாஞ்சையற்று உலகத்தின் ஆசையை விரும்புகிறார்கள்.

      இன்றைக்கு அநேக கிறிஸ்தவ பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதில் தீவிரிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கர்த்தருடைய நாளை புறக்கணித்து செயல்படுகின்றனர். இவ்விதமான நிலையை அவர்களின் பிள்ளைகள் கவனிக்கும் பொழுது, அவர்களும் தவறான வழிக்குள்ளாக பிரவேசிக்கிறார்கள். பயபக்தியுடன் ஆராதிக்க வேண்டிய குடும்பம், தேவனை புறக்கணித்து அந்நிய காரியங்களை நாடுகிறார்கள். அருமையானவர்களே! உங்கள் குடும்பத்தின் நிலை என்ன? உன்னைப் பற்றிக்கொண்டிருக்கும் வாஞ்சை எது? நீங்கள் நாடிப் போகிற காரியத்தில் மெய்யான சமாதானத்தை உணருகிறீர்களா? ஆகவேதான் வேதம்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்” (ஏசாயா 55:1-2). கர்த்தருக்குச் செவி கொடுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பத்தைக் கட்டுவார்.