அக்டோபர் 21              

“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கத்தரிசனம் உரைத்தோமல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோமல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோமல்லவா? என்பார்கள்” (மத்தேயு 7:22)

அந்நாளில் அநேகர் இயேசுவினிடத்தில் வந்தார்கள். கொஞ்சம்பேர் அல்ல, அநேகர் என்று சொல்லப்படுகிறது. ஒரு வேளை பெரிய பெரிய ஊழியர்கள் என்று உலகத்தில் புகழ் பெற்ற ஊழியர்களாக இருக்கலாம் அல்லது பகுதி நேர ஊழியர்களாக, இவ்விதமான வரங்களைப் பெற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு ஊழியம் செய்துவருகிற சகோதரர்களாய் இருக்கலாம். முக்கியமாக மூன்று ஊழியங்கள் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  1. தீர்க்கத்தரிசனம் 2. பிசாசுகளைத் துரத்துதல் 3. அற்புதங்களைச் செய்தல். இன்று எங்குப் பார்த்தாலும் இந்த மூன்றும்தான் பிரதானமாக ஊழியங்களில் காணப்படுகின்றன. புகழ்வாய்ந்த அநேக ஊழியங்கள் இதன் அடிப்படையில்தான் செயல்படுகின்றன. மக்களும் இவ்விதமான ஊழியங்களையே விரும்புகிறார்கள். இவைகள் இல்லாத கூட்டங்களுக்குச் செல்ல அவர்கள் விரும்புவதில்லை. மக்கள் மத்தியில் பெரிய எழுப்புதல் என்றும், உயிர்மீட்சி என்றும், ஆவியின் மழை என்றும், அக்கினி ஊற்றப்படுகிறதென்றும் பல பெயர்கள் வைத்து புகழப்படுகிறது.

 ஆனால், கர்த்தர் இதை அங்கிகரிக்கிறாரா என்பதை அவர்கள் எண்ணுவதில்லை. தீர்க்கத்தரிசனம் சொன்னால் அவர் பெரிய ஊழியர், அது பெரிய ஊழியம், அது எவ்விதமான தீர்க்கத்தரிசனம் என்பதாகக்கூட அவர்கள் சிந்திப்பதில்லை. அற்புதம், அது மெய்யா, பொய்யா என்பதையும் பார்ப்பதில்லை. பிசாசுகள் துரத்துதலும் அவ்விதமே. ஆண்டவர் அவர்களைக்குறித்து என்ன சொல்கிறார் என்று சற்றேனும் சிந்தித்துப்பாருங்கள். அது உங்கள் ஆத்துமாவை இவ்விதமான வஞ்சகங்களுக்கு விலக்கி காத்துக்கொள்ளும் “அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்றார்.” (மத்., 7:23)  சிந்தித்துப்பாருங்கள்.