ஏப்ரல் 3

“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரேமியா 17:7).

நம்முடைய முழு நம்பிக்கையும் கர்த்தர் மேல் மாத்திரமே இருப்பது அவசியம். அநேக வேளைகளில் நாம் கர்த்தரை நம்புகிறோம் என்று சொன்னாலும், மனிதர்களை நம்புகிறவர்களாகவே காணப்படுகிறோம். இங்கு ‘கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் கர்த்தரை மாத்திரமே நம்பி வாழக் கற்றுக் கொள்வது நம்முடைய ஆத்துமாவுக்கு மிக பிரயோஜனமாக இருக்கும். அப்பொழுது, “அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்” (எரேமியா 17:8) என்று வேதம் சொல்லுகிறது.

நம் வாழ்க்கையில் ஒரு அருமையான ஆசீர்வாதம் இருக்கும்போது, நாம் ஏன் அதை பெற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? ஏனெனில் அந்த அளவுக்கு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே அதன் பொருளாக இருக்கிறது. நாம் கர்த்தர்மேல் மட்டும் நம்பிக்கையாக இருக்கும்பொழுது, கர்த்தர் அதில் பிரியமுள்ளவராக இருக்கிறார். மேலும் “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்” (சங்கீதம் 125:1) என்று வேதம் சொல்லுகிறது. இன்னும் “கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” என்று வேதம் சொல்லுகிறது. நாம் அவ்விதமான வாழ்க்கை வாழ, நம்முடைய விசுவாசத்தை காத்த்துக்கொள்ள வேண்டும். அநேக வேளைகளில் நாம்  கர்த்தரோடு கூட மனிதர்களையும் சூழ்நிலைகளையும் நம்புகிறவர்களாகக் காணப்படுகிறோம். அது நம் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு தடையாக இருக்கும். கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்(எரேமியா 17:8).