ஜனவரி  21

“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1).

இந்த வசனத்திற்குப் பின்பாக, வேதத்தின் சாட்சியத்தைக் குறிப்பிட்டு ஆக்கியோன் இதை எழுதுகிறார். விசுவாசம் என்பது வேதத்தையும் வேதத்தில் உள்ளவைகளையும் நம்புவது. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் ஒருக்காலும் வேத சத்தியங்கள் ஒழிந்து போவதில்லை. இதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த விசுவாசம் என்பது நம்முடைய வாழ்க்கையில் அனுதினமும் பெருக வேண்டும். மெய்தான், அநேக வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில் போராட்டங்கள் நெருக்கங்களைச் சந்திக்கின்றோம். ஆனாலும் இவைகளின் மத்தியில் நமக்கு விசுவாசமே பெரிதும் உதவும். “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” (எபிரெயர் 10:39) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய ஆத்தும நலன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதின் அடிப்படையில் காணப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அக்கினிப் போல சோதனைகள் கூட நம்முடைய வாழ்க்கையில் வரலாம். “அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1 பேதுரு 1:7). தேவனுடைய வார்த்தையை நாம் சார்ந்து வாழுவதில் பல விசுவாசப் போராட்டங்கள் நமக்கு நியமிக்கபட்டிருந்தாலும், அவைகள் நம்முடைய வாழ்க்கையில் கடைசியாக, கனத்தையும் மகிமையும் உண்டாக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். நம்முடைய விசுவாசப் போராட்டம் வீணாய்ப் போகாது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வரும்பொழுது, நம்முடைய விசுவாசமானது கனப்படுத்தப்படும். ஆகவே விசுவாசம் தேவனுடைய வார்த்தையை நம்புவதும், அதைச் சார்ந்து வாழுகிறதுமாயிருக்கிறது.