நவம்பர் 18
“நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும்” (தீத்து 2:13)
ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை என்பதுண்டு. அந்த நம்பிக்கை என்னவெனில் நித்தியத்தைக் குறித்த ஆழமான நம்பிக்கை. உன்னுடைய வாழ்க்கையில் இந்த நம்பிக்கை இருக்கிறதா? அந்த நம்பிக்கையின் சாராம்சம் என்னவெனில் அது ஆனந்த பாக்கியமுடையது. ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இந்த நம்பிக்கை என்பது ஆழமாக பதிந்திருக்கவில்லை என்றால், அவனுடைய நித்தியம் கேள்விக் குறியே. ஏனென்று கேட்டால் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் நித்தியத்தை குறித்து ஆழமான உறுதியான நம்பிக்கையைக் கொடுக்கிறார். “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலி 3:20-21) என்று பவுல் சொல்லுகிறார்.
இந்த உலகமானது ஒரு கிறிஸ்தவனுக்கு நம்பிக்கைக்குரியதல்ல. அவனுடைய நம்பிக்கை முழுவதும் நித்தியத்தைக் குறித்தே காணப்படும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் என்று சொல்லுபவர்கள் இந்த உலகத்தின் பல காரியங்களில் தங்களின் நம்பிக்கையை வைத்து வாழுகின்றனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை என்பது உறுதியற்றதே. ஆனால் ஒரு மெயக்கிறிஸ்தவன் பரலோகத்தைக் குறித்து ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருப்பான். மேலும் இந்த உலகம் ஒரு வாடகை வீடுதான் என்றும் நிச்சயத்திருப்பான். அவன் எந்தவொரு சூழ்நிலையிலும் (கஷ்டங்கள், பாடுகள், துக்கங்கள், சிலுவை உபத்திரவங்கள்) எதுவாயினும் அவன் கடந்து செல்ல கர்த்தரின் கிருபையை சார்ந்திருப்பான். “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்;” (2 தீமோ 4:8) என்று பவுலின் நித்தியத்தை குறித்த நம்பிக்கையைக் காணலாம். உன்னில் இவ்விதமான நம்பிக்கை காணப்படுகின்றதா? இந்த நம்பிக்கை உன்னில் இல்லையென்றால் நீ இப்பொழுது கொண்டிருக்கிற நம்பிக்கை மாயையே.