ஜனவரி 2    

 “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை” (சங்கீதம் 9:18).

இந்த இடத்தில் ஆண்டவர், எளியவர்கள் தம்மால்  மறக்கப்படுவதில்லை என்று  சொல்லுகிறார். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தரின்பேரில் சிறு குழந்தையைப் போல சார்ந்து கொள்ளுகிறவர்கள் ஒருக்காலும் மாறக்கப்பட்டுப் போவதில்லை என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவ்விதமான மக்களின் நம்பிக்கையானது, நிச்சயமாக ஒருநாளும் வீணாய்ப் போகாது. ஆகவே முதலாவது ஆண்டவர் சொல்லுவது, அவர்கள் எப்போதும் மறக்கப்படுவதில்லை என்பதே.  ஒருவேளை இந்த நாட்களில் பாடுகளின் வழியாய் கடந்துபோவீர்களானால் எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் காரியங்கள், கர்த்தரால் மறக்கப்பட்டவைகளைப் போல இருக்காது. அடுத்தது சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. அதாவது உங்களுடைய வாழ்க்கையில் பல விதங்களில் நீங்கள் சிறுமைப்பட்டிருக்கலாம் அல்லது மற்றவர்களால் நீங்கள் அற்பமாக எண்ணப்படலாம். ஆனால் ஆண்டவர், அவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவன் நிச்சயமாக மேன்மையான காரியங்களைச் செய்வார். “நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது” (நீதிமொழிகள் 23:18). கர்த்தருடைய கிருபையைச் சார்ந்துகொள்ளுகிறவர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீணாய்ப் போகாது. கர்த்தருடைய ஞானத்தை நாம் பெற்றுக்கொள்ளும்பொழுது, நம்முடைய ஆத்துமாவுக்கு அது மிகுந்த இன்பமாயிருக்கும். கர்த்தருடைய ஞானத்தைக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை நடத்திச்செல்லும்பொழுது, அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அதிக உதவியாய் இருக்கும். இந்த நல்ல தேவனை நாம் சார்ந்துகொள்ளுவோம். நிச்சயமாக அவர் தம்முடைய வார்த்தையின்படி நமக்கு இரங்குகிறவராகவே இருப்பார்.