கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 13                  ஏற்றகாலத்தில் உயர்த்தும்படி         1 பேதுரு 5:1-10

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு,

அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6)

    மனிதன் தனக்கென்று சொந்த வழிகளையும், தீர்மானங்களையும் கொண்டு வாழவேண்டுமென்று விரும்புகிறான். அதினால் அவன் பெரிய காரியங்களைச் செய்யமுடியும் என்று நினைத்து அவ்விதம் செயல்படுகிறான். ஆனால் அது அவனுக்கு ஒருபோதும் உண்மையான வெற்றியைக் கொண்டுவராது. ஆசீர்வாதமான காரியங்கள் அதின் வழியாக வராது. உண்மையான ஆசீர்வாத வழியை அவன் பெறவேண்டுமானால் முதலாவது அவன் தேவனோடு ஒப்புரவாகப்பட்ட வாழ்க்கையை பெற்றிருக்கவேண்டும். தேவனோடு ஒப்புரவாகாமல், அவனுடைய  பாவங்களுக்காக வருத்தப்பட்டு மனம்திரும்பாமல் தேவன் அவனை ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை தேவன் ஒருபோதும் செய்யமாட்டார்.

    அவருடய ‘பலத்த கை’ என்று சொல்லப்படுவது, சர்வவல்லவருடைய உன்னதத் திட்டம், அவருடைய ஞானம், வல்லமையைக் குறிக்கிறது. நீ உன்னை அவைகளின் கீழ் தாழ்த்து. உன்னையே நீ புத்திமானென்று எண்ணாதே. உன்னுடைய ஞானம் உன்னை வழிநடத்தும் என்று எண்ணாதே. அவ்விதம் எண்ணி மோசம்போனவர்கள், கணக்கிலடங்காதவர்கள். அவர்களிடத்தில் ஒருவனாக நீ இருப்பது தேவனுக்குப் பிரியமானதல்ல. அதே சமயத்தில் தேவனிடத்தில் தங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுத்த மக்களை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். அவர்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. நீ இவர்களில் ஒருவனாக இருப்பதே மேன்மையானது.

   மேலும் அடங்கியிருப்பதோடு நின்று விடுவதல்ல, தேவனின் ஏற்றகாலம் வரும்வரை பொறுமையுடன் காத்திருக்கவேண்டும், அவசரப்படக்கூடாது. அவசரம் எப்போதும் காரியங்களைக் கெடுத்துவிடும். நிதானம் காரியங்களை நிலைப்படுத்தும். தேவனுடைய ஏற்ற காலத்திற்காக காத்திருப்பதில் நீ ஏமாந்துபோகமாட்டாய். அதை தேவன் நிச்சயமாக நிறைவேற்றுவார். தேவன் செய்வது எதுவுமே மிகச்சிறந்ததாகவே அமையும். அது இரண்டாம் தரமானதாக இருக்காது.