கிருபை சத்திய தின தியானம்

ஜனவரி 17                    சகலமும் புதிதாக்கப்படும்               வெளி 21:1-8

‘சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ,

நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்’ (வெளி 21:5).

          உன் வாழ்க்கையில் பழமையாய் போனவைகள் நலிந்து போனவைகள், நம்பிக்கையற்றுப் போனவைகள் உண்டா? அவைகளைக் கர்த்தர் புதிதாக்குவேன் என்று சொல்லுகிறார். அவைகள் புதிதாக்கப்படும். அவைகள் புதிய நோக்கத்தையும், புதிய உற்சாகத்தையும், புதிய தரிசனத்தையும் கொண்டதாய் காணப்படும்படியாக மாற்றப்படும். உன்னுடைய வாழ்க்கையின் பழைய நம்பிக்கையின்மையின் பாதை புதிய பாதையாக மாற்றியமைக்கப்படும். கர்த்தர் உன்னைப் புதிய வழிக்குள் நடத்தி உன்னை ஆசீர்வதிப்பார்.

          ஏசாயா 42:9 -ல் ‘பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்’என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தரானவர் ஒரு மனிதனில் பழையவைகளை ஒழித்து, புதிதாக கொடுப்பது இரட்சிப்பு மாத்திரமல்ல, உன்னுடைய வாழ்க்கையின் எல்லா காரியத்தையும் புதிதாக்குகிறவர். உன் வாழ்க்கையில் மென்மேலும் பெலப்படுத்துகிறவராகவே இருக்கிறார். இன்னுமாக தேவன், ‘இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’(ஏசாயா 43:19) என்று சொல்லுகிறார்.

      உன் வாழ்க்கையானது வனாந்தரமாகவும், அவாந்தரமாகவும் காணப்படுகிறாதா? இதோ காலம் சமீபமாயிற்று, உன் வாழ்க்கையில் வனாந்தரத்தில் வழியையும், அவாந்திரத்திலே ஆறுகளையும் உண்டாக்குவேன் என்று சொன்னவர் அவ்விதமாகச் செய்வார். புதிய காரியத்தைச் செய்கிற அவர் உன்னுடைய வாழ்க்கையில் புதிய காரியங்களைச் செய்வார். அவரை நீ பற்றிக்கொள் உன் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்வார்.