கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி 5          சகலத்தையும் புதிதாக்கும் தேவன்        வெளி 21:1-8

      ‘இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்’ (வெளி 21:5).

      தேவன் மாத்திரமே சகலத்தையும் புதிதாக்குகிறவர். மனிதன் பல காரியங்களை புதிப்பிக்கும் படியாக முயற்சிக்கிறான். ஆனால் புதிப்பித்தாலும் அவைகள் மறுபடியும் பழமையாய்ப் போய்விடும். ஆனால் தேவனுடைய புதிப்பித்தல் நிலையானது, நித்தியமானதுமாகும். ‘இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’(ஏசாயா 43:19) என்று சொல்லுகிறார்.

      கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் புதிய காரியங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கும். வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாவது போல அவைகள் ஆச்சரிய விதமாக இருக்கும். நம்முடைய வாழ்க்கையைக் கூட கர்த்தர் புதுப்பிக்கிறவராக இருக்கிறார். பழைய பாவத்திலும், பாவத்தின் ஆளுகையின் பிடியிலிருந்தும் மீட்கப்பட்ட புதிய வாழ்க்கையாக மாற்றுகிறவர். பவுல் கொரிந்தியருக்கு எழுதும்பொழுது, ‘இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின’ (2கொரி 5:17) என்று சொல்லுகிறார். தேவன் ஒரு மனிதனுடைய இருதயத்தை மாற்றும்பொழுது எல்லாமே புதிதாகுகின்றது. மாற்றப்படாத இருதயத்தோடு வாழுகிற வாழ்க்கை, அது கிறிஸ்துவின் பெயரால் காணப்பட்டாலும், கிறிஸ்துவின் பக்திக்குரிய பல காரியங்கள் காணப்பட்டாலும், அது மெய்யான புதுபிக்கப்பட்ட  வாழ்க்கையல்ல. அதில் தேவனுடைய மெய் சமாதானத்தைப் பார்க்க முடியாது. தேவனுடைய உன்னதமான காரியங்களை அதில் பார்க்க முடிவதில்லை.

         அருமையான சகோதரனே! சகோதரியே! நீ ஒரு புதுப்பிக்கப்பட்ட நபரா? பரிசுத்த ஆவியானவரின் மூலமாக புதுப்பிக்கப்பட்ட, மறுபிறப்படைந்த வாழ்க்கையை நீ கொண்டிருக்கிறாயா? அல்லது பழைய பாவத்தின் சேற்றில் நீ உழன்று கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தரிடத்தில் உன்னை ஒப்புக்கொடு. உன்னுடைய பழைய வாழ்க்கையை புதுப்பிக்கிறவர் கர்த்தர் மாத்திரமே. அர்த்தமற்ற உன்னுடைய வாழ்க்கையை, பிரயோஜனமுள்ள வாழ்க்கையாக, இந்த உலகத்தில் வாழும்பொழுது  அது மகிமைகரமான ஒரு வாழ்க்கையாக மாற்ற, அவர் ஒருவரே வல்லவராக இருக்கிறார்.