“தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே” (நெகேமியா 1:10).

 நெகேமியா இஸ்ரவேல் மக்களை தேவன் விடுவித்ததைக் குறித்து இந்த இடத்தில் நினைவுபடுத்தி ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம். அவர்களை மாத்திரமல்ல நம் ஒவ்வொருவரையும் தேவன் தம்முடைய வல்லமையினாலும் பலத்தக் கரத்தினாலும் மீட்டிருக்கிறார். சாத்தனுடைய அடிமைத்தனத்திலிருந்தும், அவன் நம்முடைய மனக்கண்களை குருடாக்கிப்போட்ட நிலையிலிருந்தும் கர்த்தர் என்னை மீட்டிருக்கிறார் என்று நினைக்கும்போது அவருடைய மிகுந்த அன்பும் வல்லமையும் வெளிப்படுகின்றது. ஒரு காலத்தில் பாவத்தின் அடிமைத்தனம் என்னை அழித்துக்கொண்டிருந்ததை எண்ணிப்பார்க்கும்பொழுது, நான் என்னை விடுவித்துக் கொள்ளமுடியாத அந்தச் சூழ்நிலையில் தேவன் தம்முடைய கிருபையினாலும் வல்லமையினாலும் பலத்தக் கரத்தினாலும் மீட்டுக்கொண்டார். இந்த உலகத்தில் இரட்சிக்கப்படாத ஒவ்வொரு மனிதனும் சாத்தானின் ஆளுகைக்குள் இருக்கிறான் என்பது உண்மை. நம்முடைய விழுந்துப் போன சுபாவம் நம்மை எப்பொழுதும் பாவத்திற்கு அடிமையாக்கிக் கொண்டே போகிறது. ஆனால் குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று வேதம் சொல்லுகிறது. இன்றைக்கு தேவன் இம்மட்டும் கொடுத்திருக்கின்ற விடுதலையை எண்ணிப்பார்க்கும்பொழுது, இது என்னுடைய முயற்சியினால் ஆனது அல்ல. தேவனுடைய மகாப் பெரிய பலத்த கரமும் அவருடைய வல்லமையினால் மாத்திரமே. நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த ஆண்டவருக்கு நாம் எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாக வாழுவது அவசியம். அவருக்கு அர்ப்பணித்து வாழுவதும் அவசியம்.