கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 28             நெரிந்த நாணலை முறியார்       ஏசாயா  42 : 1-10

அவர் நெரிந்த நாணலை முறியாமலும்,

மங்கியெரிகிற திரியை அணையாமலும்,

நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்(ஏசாயா 42:3)

 

       இந்த வசனம் நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது பாருங்கள். இந்த உலகில் தளர்ந்துபோன  பலவீனமான  மக்கள் வரவேற்கப்படுவதில்லை. ஆனால் தேவன் செயல்படும் விதம் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கிறது. நான் நாணல் என்று சொல்லுவதற்கும் தகுதியுள்ளவனல்ல. ஏனென்றால் அந்த நாணல் வளர்ந்து நின்று, பார்ப்பதற்கு செழிப்பாய் காணப்படுகிறது. அது தோற்றத்தில் அழகான தோற்றத்தை கொண்டிருக்கின்றது. ஆனால் நானோ நெரிந்த நாணலாக இருக்கிறேன். நிமிர்ந்து நிற்க திரானியற்றவனாய் இந்த உலகில் எல்லா போராட்டங்களின் மத்தியில் கடந்துச் செல்லமுடியாதவனய் இருக்கிறேன். மிகச் சிறிய சோதனையிலும் முறிந்துவிடுகிறேன். தோற்றுவிடுகிறேன், தடுமாறுகிறேன். நம்பிக்கையில்லாத ஒரு மனிதனாகத் தீமைக்கு எதிர்த்து நிற்க திரானியற்றவனாக வாழுகிறேன். ஆனாலும் தேவன் என்னை முறித்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார். தேவன் அவ்விதம் செய்யமாட்டார் என்றால், இந்த உலகில் வேறு எந்த மனிதனும் அவ்விதம் என்னைச் செய்யமுடியாது என்பதை அறிவேன்.

     நான் பிரகாசமுள்ள திரியாக அல்ல, மங்கியெரிகிற திரியாக இருக்கிறேன். நான் சீக்கிரத்தில் அணைந்துவிடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு மங்கியெரிந்துக் கொண்டிருக்கிறேன். என்னில் ஒளி எவ்வளவு குறைவாய் இருக்கிறது. வெறும் புகையை வெளிப்படுத்துகிறவனாய் காணப்படுகிறேன். ஆனாலும் என் தேவன் என்னை அணைத்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார். அப்படி அவர் சொல்லியிருக்க நான் ஏன் பயப்படவேண்டும்.

   அன்பானவரே! உன் ஆவிக்குரிய பெலம் எவ்வளவு குறைவானதாக காணப்பட்டாலும் நீ அநேக சமயங்களில் உன் ஆவிக்குரிய நிலையைக் குறித்து கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தாலும் கலங்காதே. தேவனையே நோக்கிப்பார். சாத்தான் உன்னை அதைரியப்படச்செய்யலாம். ஆனாலும் சோர்ந்துப் போகாதே. உன்னை அழைத்த தேவன் வல்லவராயிருக்கிறார். அவர் உன்னை முற்றும் முடிய இரட்சிப்பார்.