“நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்” (புலம்பல் 3:8).

ஒருவேளை உங்களுடைய பாடுகள் நெருக்கத்தில் நீங்கள் ஆண்டவரை சத்தமிட்டு கூப்பிட்டாலும் உங்களுடைய ஜெபம் கேட்கப்படாததைப் போல் உணர்கின்றீர்களா? இஸ்ரவேல் மக்கள் வழிவிலகிப் போன வேளையில் 70ஆண்டுகள் பாபிலோன் தேசத்தில் அடிமைகளாய் வாழ்ந்தார்கள். இந்த வேளையில் எரேமியா புலம்பலை எழுதுகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய பாவம் தேவனை விட்டு நம்மைப் பிரிக்கிறது. ஆனால் அதற்குப் பரிகாரம் உண்டா? உண்டு. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு அவருடைய சமூகத்தில் நம்மைத் தாழ்த்தும்பொழுது நம்மை மன்னிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகலப் பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நான் அக்கிரம சிந்தை கொண்டிருப்பேன் என்றால் தேவன் என் ஜெபத்திற்கு செவிக் கொடுக்க மாட்டார் என்று வேதத்தில் பார்க்கிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்விதமான சிந்தையுள்ளவர்களாய் வாழுகிறோம் என்பதைக் குறித்து சிந்திப்பது மிக அவசியம். நம்முடைய ஜெபம் கேட்கப்படவில்லை என்று எண்ணிச் சோர்ந்துப்போக வேண்டிய அவசியமில்லை. நம்முடைய பாவங்களை மன்னிக்கிற தேவன் ஒருவர் உண்டு என்ற உணர்வோடு அவருடைய சமூகத்தில் நம்மைத் தாழ்த்தும்பொழுது, நிச்சயமாக நம்முடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார். கேளுங்கள் தரப்படும் என்று சொன்ன ஆண்டவர், தம்முடைய வார்த்தையில் மாறுகிறவர் அல்ல. தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானதைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆகவே நாம் நம்பிக்கையோடு தேவனுடைய சமூகத்தில் போகலாம். ஒருவேளை இன்றைக்கு உங்களுடைய ஜெபம் கேட்கப்படாததைப் போல இருந்தாலும் தேவனிடத்தில் உங்களைத்  தாழ்த்தும்பொழுது நிச்சயமாக தேவன் உங்களுடைய ஜெபத்தைக் கேட்டு பதிலளிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே நாம் சோர்ந்துபோக வேண்டிய அவசியமில்லை.