டிசம்பர் 20                                 

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்(ஏசாயா 26:4)

     இன்றைக்கு அநேகர் ஒரே சீரான விசுவாசத்தைக் கொண்டிருப்பதில்லை. கஷ்டநேரங்களில் மாத்திரம் தேவனை நோக்கி ஜெபித்தால் போதும், நம்பினால் போதும், மற்ற நேரங்களில் தேவனை நாம் தேடவேண்டியதில்லை என்று எண்ணுகிறார்கள். இது மெய் விசுவாசமல்ல. விசுவாசம் என்பது  கிறிஸ்தவ வாழ்க்கை முறை. அது அவ்வப்பொழுது கழற்றி மாட்டும் சட்டையைப்போல் அல்ல.

     நமது தேவன் நித்தியமான தேவன். தேவன் நம்மை நித்தியத்தின் அடிப்படையில் மாற்றியிருக்கிறார். தேவனைக் கன்மலையென்று வேதத்தில் அநேக இடங்களில் சொல்லப்படுகிறது. அசையாத உறுதியான கற்பாறையாக தேவன் இருக்கிறதைக் குறிக்கிறது. தேவனை அசைக்கக்கூடிய வல்லமை என்பது உலகில் ஒன்றுமில்லை. சாத்தானும் அவருடைய ஆளுகையின் கீழ்தான் இருக்கிறான். அவருடைய அனுமதியில்லாமல் அவனும் ஒரு இம்மியளவும் அசைக்கமுடியாது. உங்களில் இருக்கிறவர் அவனிலும் வல்லவர். எவ்வளவு மகத்துவமான உன்னதமான தேவன் பாருங்கள். தாவீது தேவனை அநேக இடங்களில் என் கன்மலை என்று உரிமைப் பாராட்டுகிறார். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும் என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும் என் கேடகமும் என் இரட்சண்யக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.’ (சங் 18:2) என்றும் என் கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக‘ ( 2சாமு 22:47) என்றும் தாவீது  கர்த்தரை துதிக்கிறார்.

     ஆனால் இஸ்ரவேல் மக்களைக் குறித்து என்ன சொல்லப்படுகிறது? உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய் (ஏசாயா 17:10) அருமையான சகோதரனே! சகோதரியே! உன்னைக்குறித்து இவ்விதம் சொல்லப்படுமானால் அது எவ்வளவு துக்ககரமானது! இன்று நீ அப்படி இருப்பாயானால் நீ ஆவிக்குரிய பின்வாங்குதலில் ஜீவிக்கிறாய். இதோ தேவன் அவரை விட்டு விலகுகிறவர்களுக்கு இடறுதலின் கன்மலையாயிருக்கிறார். (ஏசாயா 8:14) மனந்திரும்பு. கர்த்தர் உன் வாழ்க்கையைக் கட்டுவார்.