கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 19              நித்திய மீட்பு            எபிரெயர் 9:1-12

“தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம்

மகாபரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து,

நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபிரெயர் 9:12)

    நீ உன்னுடைய வாழ்க்கையில் உன்னை மீட்கும்படியாகச் செலுத்தப்பட்ட விலைகிரயத்தை அறிந்து வாழ்கிறாயா? அநேக விசுவாசிகள் அதன் மேன்மையை உணராததினால் தங்களுடைய இரட்சிப்பு விலையேறப்பெற்றது என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிதான இரட்சிப்பு‘ (எபி 2:4)என்று வேதம் சொல்லுகிறது.

    ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்திலிருந்து சிந்திய இரத்தத்தின் மூலம் கிடைத்த மீட்பு இது. அவருடைய பாடுகளின் மூலமாய் வெளியான இரத்தம். தேவாதி தேவனின் இரத்தம் இது. ஆகவேதான் வேதாகமம் குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தம்” (1பேதுரு 1:19) என்று சொல்லுகிறது.

    நித்திய மரணத்திலிருந்து குற்றமுள்ள பாவியை நித்திய மீட்பினால் இயேசு மீட்டிருக்கிறார். அவர்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர்களுக்கு எதிரிடையாய் இருந்த கையெழுத்தைக் குலைத்துப் போட்டார். சிலர் இன்றைக்கு ‘ஒரு மனிதன் இரட்சிப்பை பெற்ற பின் அவன் எந்த நேரத்திலும் அதை இழந்துப்போக வாய்ப்பு உண்டு என்று போதிக்கிறார்கள். ஆனால் இது வேதத்தின்படி தவறானது. தேவன் நம்மை நித்திய மீட்பினால் மீட்டு இரட்சித்திருக்கிறார் என்று வேதம் தெளிவாய் போதிக்கிறது.

    இந்த உலகத்தில் ஒரு மனிதன் வேறு எதினாலும் இந்த மீட்பை பெறமுடியாது. அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் (1பேதுரு 1:18) என்று வேதம் சொல்லுகிறது. “அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார்.”(1கொரி 1:31) இந்த மீட்பு சாதாரணமானதல்ல. அவர் உன்னை பாவத்திலிருந்தும், பாவத்தின் சாபத்திலிருந்தும், பாவத்தின் அடிமைதனத்திலிருந்தும் மீட்டிருக்கிறார். நீ மெய்யாலும் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட, நித்திய மீட்பை பெற்ற ஆத்துமாவாய் வாழ்கிறாயா?