மே 17                 

“கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன

வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்” (யாத் 13:14)

       நாம் ஒவ்வொருவரும் பாவம் என்கிற வீட்டில் அடிமைகளாக பணி செய்து கொண்டிருந்தோம். பாவத்தின் அடிமைகளாய், பாவத்தின் ஆளுகையினால் நாம் அடிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் கர்த்தரோ நமக்கு இரங்கி அந்த அடிமைத் தனத்திலிருந்து மீட்டுக்கொண்டார். இரட்சிப்பு என்பது அடிமைத்தனத்திலிருந்து பெறுகிற மீட்பாகும்.

      கர்த்தர் எவ்வளவு பெரிய மீட்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை சிந்திக்கும்பொழுது அது நமக்கு மிகுந்த ஆச்சரியமானதாக இருக்கிறது. ஒரு அடிமை தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளமுடியாது. நாமும் கூட பாவத்திலிருந்தும், பாவ சுபாவத்திலிருந்தும் நம்மை நாமே விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாய் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் கர்த்தரோ இரக்கமுள்ளவராய் நம்மைத்தேடி வந்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பண்ணி இரட்சித்தார். நாம் நம்முடைய இரட்சிப்பை நினைவு கூறுவோமாக.

      மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்;” யாத் (13:3) என்று அறிவுறுத்திக் கூறுவதைப் பார்க்கிறோம். நாம் கர்த்தருடைய இரசிப்பின் மேன்மையை நினைவு கூறுவோம். இன்னுமாக மோசே “கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்;” யாத் (13:3)  என்று சொல்லுகிறார். தம்முடைய ஆவியானவரைக் கொண்டு, பாவத்தின் சேற்றில் உழன்று அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நம்மை கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தின் மூலமாக இரட்சித்து மீட்டுக் கொண்டதை ஒவ்வொரு நாளும் நினைவு கூர்ந்து கர்த்தருக்கு நாம் நன்றிகளை ஏறேடுப்போமாக. அந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்கும்படியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் செலுத்தின விலைக் கிரயத்தை நினைத்து, இனி அவருக்கு அடிமைகளாய் வாழுவோமாக.