“அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்” (ஏசாயா 56:5).

தேவன் தம்முடைய மக்களுக்கு ஒருக்காலும் மாறாத நித்தியமான நாமத்தைக்  கொடுக்கிறவராக இருக்கிறார். அப்படியென்று சொன்னால், அந்தக் கிருபையை, அதிகாரத்தை நமக்குக் கொடுக்கிறவராக இருக்கிறார். நித்தியமாய் அவரோடு வாழவும், அவருடைய ஜனங்களாக நாம் நிலைத்திருக்கவும் அவர் தம்முடைய கிருபையைக் கட்டளையிடுவதாகச் சொல்லுகிறார். தேவன் தம்முடைய மக்களுக்கென்று சிறப்பான ஆசீர்வாதங்களை வைத்திருக்கின்றார். அவைகள் உன்னதமானவைகள் மேன்மைக்குரியவைகள். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்” (வெளி 3:5) என்று வேதம் சொல்லுகிறது. நித்திய நாமத்தைக் கொடுக்கிற தேவன், நம்மை அவருடைய பிதாவின் முன்பாகவும் தூதர்கள் முன்பாகவும் அறிக்கையிடுவார், அதாவது அங்கீகரிப்பார். நமக்குரிய கனத்தையும் மேன்மையையும் பிதாவுக்கு முன்பாக உயர்த்திக் காண்பிக்கிறவராக இருப்பார். என்ன ஒரு அருமையான காரியத்தை தேவன் நமக்கு செய்கிறார்!  இந்த நம் உலகத்தின் பாடுகள் ஒன்றுமில்லை. தேவன் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தப்படுத்தினவைகளைக் கண் காணவுமில்லை காது கேட்கவுமில்லை. நம்முடைய வாழ்க்கையில் தற்காலப் பாடுகள், வரப்போகிற நித்திய மகிமைக்கு ஒப்பிடப்படுபவைகள் அல்ல. ஆகவே நாம் பெறப்போகிற மகிமையான காரியங்களை எண்ணிப்பார்த்து வாழுவோம். இந்த உலகத்தில் தற்கால சில போராட்டங்களில் சோர்ந்துபோகாமல், அவருக்குள்ளாகக் காணப்படுவோம். ஏனென்றால் நமக்கு மேலான காரியங்களை அருளுகிற கர்த்தர் ஒருவர் இருக்கிறார். அவர் நிச்சயமாக நித்திய நாமம் நமக்குக் கொடுத்து நம்மை ஆதரிப்பார் என்பதில் சந்தேகமில்லை.