கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 11                           நித்திய ஜீவன்                                         மத் 19 ; 16 – 26

‘நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையை செய்யவேண்டும்’ (மத்தேயு 19 : 16 )

            வாழ்க்கையில் மனிதன் எழுப்பவேண்டிய அநேக நல்ல கேள்விகளில் ஒன்றை இந்த பணகார வாலிபன், ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் எழுப்பினான். ஒரு மனிதன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் நித்திய ஜீவனைப் பெறவில்லையென்றால் என்ன பிரயோஜனம் என்று ஆண்டவராகிய இயேசு கேட்கிறார். ஆகவே எல்லாவற்றைக் காட்டிலும் இந்த கேள்வி மிக முக்கியமான கேள்வி. இந்த வாலிபன் நித்திய ஜீவனை வாஞ்சித்தான். அது மிகவும் பாராட்டவேண்டிய காரியம். ஆனால் இந்த வாலிபன் தன் பாவநிலையை உணர்ந்து, பரிசுத்த தேவனுக்கு முன்பாக தன் நீதி, கந்தை குப்பை என்ற மனநிலையில் வரவில்லை.

            அன்பானவர்களே! இன்று அநேகர் நித்திய ஜீவனைப்பெற இரட்சிப்பை பெற வாஞ்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் சரியான மனநிலையோடு வருவதில்லை. தங்கள் குற்றங்களை பாவங்களை உணர்ந்தவர்களாக பரிசுத்த தேவனுக்கு முன் அவர்கள் தகுதியற்றவர்கள், என்ற உணர்வோடு வருவதில்லை. ஒருவேளை இந்த வாலிபன் தனக்கு மிகுதியான பணம் இருந்ததினால் இந்த நித்திய ஜீவனை எவ்வளவு பணம் கொடுத்தாகிலும் தான் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தானோ! இயேசு இந்த வாலிபன் மனநிலைக்கு ஏற்ற வண்ணமாக பதிலளித்தார். கற்பனைகளைக் கைக்கொள் இந்த உலகில் எந்த மனிதனாவது கற்பனைகள் முழுவதையும் நிறைவேற்றினதுண்டா? இந்த வாலிபன் சுய நீதியை வெளிப்படுத்தவே இயேசு இவ்விதம் சொன்னார்.

            நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்களா? தேவன் உங்களை இரட்சித்திருக்கிறாரா? நாம் எவ்விதம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும்? நாம் ஆயக்காரன் ஜெபத்தைப்போல ‘பாவியாகிய என் மேல் கிருபயாயிரும்’ என்று ஜெபிப்போமானால் தேவன் நம்மை இரட்சிப்பார். நித்திய ஜீவன் ஆண்டவராகிய இயேசு இலவசமாய் நமக்குக் கொடுக்கும் ஈவு. தம்மைத் தாழ்த்துபவர்களுக்கே இந்தக் கிருபை அளிக்கப்படுகிறது. நீ இந்த நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறாயா?