ஜனவரி 22          நித்திய ஜீவன்             தீத்து 1:1-16

“பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்” (தீத்து 1:3-4).

      நித்திய ஜீவனைக் குறித்து ஆதிகாலமுதல் வாக்குத்தத்தம் பண்ணின நம் ஆண்டவர், அதை தம்முடைய மக்கள் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக்குறித்த நம்பிக்கையையும், தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும், விசுவாசமும் அவரே கொடுக்கிறார். ஆண்டவருடைய பிள்ளைகள் தேவனை தாங்களாக அறிந்துகொள்ளுவதில்லை. எந்தவொரு மனிதனும் ஜீவனுள்ள கடவுளை தாங்களாக அறிந்துகொள்ளவோ, விசுவாசிக்கவோ முடியாது. தேவனே அறிந்துகொள்ளுகிற அறிவையும் விசுவாசத்தையும் கொடுக்கிறவராக  இருக்கிறார். தேவன் மரித்துப்போன  பரிசுத்த ஆத்துமாக்களில் ஆவியானவர் மூலம் நித்திய ஜீவ சுவாசத்தை ஊதுகிறவராக இருக்கிறார். நித்திய ஜீவ சுவாசத்தைப் பெற்றுக்கொண்ட ஆத்துமாக்கள் சத்தியத்தை அறிகிற அறிவையும் விசுவாசத்தையும் பரிசுத்த ஆவியானவர் மூலம் பெற்றுக்கொள்ளுகி`றார்கள். இது நம் அறிவிற்கு எட்டாத ஒன்றாகும்.

      கடவுளுடைய செயல் மனிதன் ஆராய்ந்து அறிய முடியாததாகும். அவருடைய இரட்சிப்பின் திட்டத்தை நாம் எண்ணிப்பார்க்கும் பொழுது அவர் முன்பாக நம்மைத் தாழ்த்துவதைத் தவிர வேறொன்றும் செய்வதறியாது. தேவன் ஒருக்காலும் பொய்யுரையாதவர், தாம் வாக்குபண்ணினதை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார். ஆகவே நாம் நம் வாழ்க்கையில் நித்திய ஜீவனுக்கேதுவான வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்படி விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் இருப்போமாக. ஏனென்றால் அவர் பொய்யுரையாத தேவனாக இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. உண்மைத்தன்மை என்பது அவருடைய குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகவே நாம் வேதத்தை அறிகிற அறிவிலும், விசுவாசப் பாதையிலும் முன்னேறிச் செல்வோமாக.