கிருபை சத்திய தின தியானம்
ஜனவரி 7 நித்திய ஜீவனை அடைவது எப்படி? மத் 19:1-6
‘அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே,
நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த
நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்’(மத்தேயு 19:16).
இந்த பணக்கார வாலிபன் இயேசுவினிடத்தில் வந்து கேட்ட கேள்வி மிக உன்னதமான கேள்வி. ஏனென்று கேட்டால் இது நித்திய ஜீவனை அடையும்படியாக கேட்ட ஒரு கேள்வியாக இருக்கிறது. மேலான கேள்விகள், வாஞ்சைகள் நமக்கு இருப்பது நல்லது. இந்த வாலிபன் தேவனிடத்தில் வந்து நித்திய ஜீவனைப் பெற என்ன நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டது, அவன் நித்திய ஜீவனை தன் நற்கிரியைகளின் மூலம் பெற எண்ணினானோ தெரியவில்லை. நண்பர்களே! நம்முடைய வாழ்க்கையில் நித்திய ஜீவனைப் பெறுவது மிக அவசியமான ஒன்றாகும். இந்த கேள்வி நம்மிடத்தில் காணவில்லை என்றால், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோம்.
உன்னுடைய ஆத்துமா நித்திய ஜீவனில் பிரவேசிக்கும் பரலோகத்தை அடையுமா என்று ஆராய்ந்து பார்ப்பது அதிமுக்கியமானது. லூக்கா எழுதின சுவிசேஷம் 10:25 -லும் ஒரு நியாயசாஸ்திரி இயேசுவின் இடத்தில், ‘போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்’ என்று கேட்டான். அருமையானவர்களே! இன்றைக்கு அநேகர் இவ்விதமான கேள்விகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு என்ன செய்யவேண்டும்?
பின்வரும் மனிதனைப் போல வாஞ்சையோடு அதைப் பெற தாகமாக இருந்தால், அது நலமாயிருக்கும். அப்போஸ்தலர் 16:30 -ல் ‘அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்’. இது தாழ்மையோடு கூடிய தேவனுடைய நித்திய ஜீவனை தேடும்படியான ஒரு காரியமாக இருக்கிறது. தாழ்மையோடு கூட தேடும்படியான காரியம் எப்பொழுதும் வெளிச்சத்தை நோக்கி வழிநடத்தும். நம்முடைய சுயநீதியை நிலைநாட்டும்படியாக செய்கிற எந்தவொரு முயற்சியும் தோல்வியாகவே முடியும்.