கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 6                  நித்திய ஜீவன்            ரோமர் 6 :12 – 23

பாவத்தின் சம்பளம் மரணம்,  தேவனுடைய கிருபை வரமோ  

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான 

நித்திய ஜீவன் (ரோமர் 6 : 23)

            தேவனை அறியாத மனிதன் இந்த உலகத்தில் கடும் உழைப்பாளி. ஆம்! அவன் அனுதினமும் பாவம் என்கிற எஜமானுக்கு உண்மையாய் உழைக்கிறான். இடைவிடாமல் கடினமாய் உழைக்கிறான். ஆனால் அவன் அதற்கு பெறும் கூலி என்ன? ஆத்தும மரணம், தேவனைவிட்டு பிரிக்கப்பட்ட வாழ்க்கை. இறுதி பலன் நித்திய மரணம். தேவனற்ற இருண்ட வாழ்க்கை. ஒரு கெட்ட எஜமானுக்கு அடிமைப்பட்ட வாழ்க்கை. எவ்வளவு உண்மையாய் உழைத்தாலும் அவன் ஒருபோதும் நமக்கு நன்மையை நினைப்பதில்லை. இது நமக்குத் தேவையா?

            ஆனால் தேவன் கொடுப்பது நித்திய ஜீவன். தன்னுடைய வாழ்க்கையில் தேவனோடு ஜீவனுள்ள தொடர்பு கொண்ட வாழ்க்கை. தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட வாழ்க்கை நீங்கி, தேவனோடு ஐக்கியமுள்ள வாழ்க்கை. என்றைக்கு ஆண்டவராகிய இயேசு  உன்னுடைய இரட்சகராக உன் வாழ்க்கையில் இடைப்படுகிறாரோ அன்றிலிருந்து என்றென்றும் தொடரும் புது வாழ்க்கை. பாவம் வேதனையை கொடுக்கும் நித்திய ஜீவன் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பாவத்தின் மேல் வெற்றியுள்ள வாழ்க்கையைக் கொடுக்கும்.

            இதற்கு உழைக்கவேண்டுமோ? இல்லை. இதற்கு நீ உழைக்கவேண்டியதில்லை, உழைக்கவும் முடியாது. ஆகவேதான் இது உனக்கு இலவசமாக ஈவாக ஆண்டவரால் கொடுக்கப்படுகிறது. மெய்யான இரட்சிப்பைப் பெற்ற ஒவ்வொரு விசுவாசியும் தினமும் இந்த இரட்சிப்பை தனக்கு இலவசமாக கொடுத்த ஆண்டவரைத் துதிப்பான். ஆம், இது அவர் பாவியாகிய உன்னை நேசித்து அநாதி சிநேகத்தால் உனக்குக் கொடுத்திருக்கிற வெகுமதி. நீ இதுவரை பெறவில்லையென்றால் இன்றே பெற்றுக்கொள். தேவனை நோக்கி நம்பிக்கையோடு செல். அவரிடத்தில் வருகிறவர்களை அவர் புறம்பே தள்ளுவதில்லை. உண்மையான இருதயத்தோடு அவரிடத்தில் சென்றால், வெறுமையாய் திரும்புவதில்லை.