பிப்ரவரி 10       கிறிஸ்துவின் நாள்பரியந்தம்       பிலி 1:1-11

“உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” (பிலிப்பியர் 1:5).

      பவுலுடைய ஊழியத்தில் ஒரு மனிதனில் மெய்யான நற்கிரியையும், இரட்சிப்பையும் தொடங்குவது தேவன் மட்டுமே என்பதை அறிந்திருந்தார். அநேக சமயங்களில் நாம் மனிதர்களின் இரட்சிப்பு அவர்களுடைய நற்கிரியைகளின் மூலமாக ஏற்படுவதாக எண்ணி நாம் போதனை செய்கிறோம். அவ்விதமான எண்ணத்தோடு கூட மக்களிடத்தில் இருந்து நாம் எதிர்பார்த்து செயல்படுகிறோம். ஆகவே அந்த மக்கள் பின்வாங்கிப் போகும் பொழுது நாம் உதவி அற்றவர்களாகக் காணப்படுகிறோம். பவுல் இந்த இடத்தில் நற்கிரியைத் தொடங்கினவர் இயேசு கிறிஸ்து,  முடிவு பரியந்தம் காப்பார் என்பதை விசுவாசித்து இருந்தார்.

      நாம் எப்பொழுதும் ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்முடைய ஞானத்தினாலோ அல்லது சுயபுக்தியினாலோ எந்த ஒரு காரியமும் நடைபெறும் என்று எண்ணி  செயல்படும் பொழுது, நம்முடைய நம்பிக்கை எப்பொழுதும் ஏமாற்றத்திற்குள்ளாகவே கொண்டு செல்லும். ஏனென்றால் மனிதனுடைய செயல்பாட்டில் தேவனுடைய செயலை நாம் இணைக்க முடியாது. தேவடைய கிருபை அங்கு செயலாற்றுகிறது. அவருடைய கிருபையை நாம் சார்ந்து கொண்டு போகும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆவிக்குரிய காரியங்களில் நல்ல முடிவை  பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு. நாம் எப்பொழுதும் தேவன் இவ்விதமாக செய்கிறவர் என்பதை ஆழமான உணர்வோடு, அவருடைய கிருபை மேன்மைக்குரியது என்பதை எண்ணி  வாழ்வது மிக அவசியமானதாக இருக்கிறது.

      பவுல் இவ்விதமான இந்த சூழ்நிலையின் மத்தியிலே கடைசி மட்டும் தேவன் நடத்தி வருவார் என்று விசுவாசிக்கிறார். ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்ட பின்பு ஆண்டவர் அவனைப் பாதியில் விட்டுவிடுகிறவரல்ல. அதை முற்றும் முடிய பாதுகாத்து இரட்சிக்கிறார். அவருடைய திட்டம் அருமையாய் செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் விளங்கி, கர்த்தருடைய கிருபை அதிகமாய் சார்ந்து கொள்வோமாக. “நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்” (எபிரெயர் 3:14).