ஆகஸ்ட் 7 

“சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.” (உபா 7:7)

இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்கு முன்பாக மோசே செய்த மூன்று பிரசங்கங்களை உபாகம புஸ்தகத்தில் வாசிக்கிறோம். உலகத்தில் எல்லா ஜனங்களைக் காட்டிலும் நீங்கள் மேலானவர்களாக அல்லது உயர்ந்த மக்களாய் இருந்ததினால், கர்த்தர் உங்களைத் தெரிந்துக்கொள்ளவில்லை. நீங்கள் கொஞ்சமாயிருந்தீர்கள், அற்பமானவர்களாயிருந்தீர்கள், அப்படிபட்ட உங்களை கர்த்தர் தம்முடைய கிருபையினால், இரக்கத்தினால், தயவினால், அன்பினால் தெரிந்து கொண்டார்  என்று உங்களை பற்றி உயர்வாய் எண்ணிவிடாதீர்கள் என்று மோசே எச்சரிக்கிறார்.

நாமும்கூட நம்மைப் பற்றி தெளிவாய் அறிந்திருப்பது மிக மிக அவசியம். உலகத்தில் மற்ற மனிதர்களைக் காட்டிலும் முக்கிய விசேஷித்த மக்களாக இருப்பதினால் தேவன் நம்மைத் தெரிந்துக்கொள்ளவில்லை. நாம் பாவிகளாய் வழிதப்பி போய்க்கொண்டிருந்தோம். அவனவனுடைய வழியையே தெரிந்துக்கொண்டு, அதில் நடந்து வந்தோம் ஆனால் தேவன் தாமே நம்மில் வைத்த மகாபெரிய தயவினிமித்தம் நம்மை இரட்சித்திருக்கிறார். இதில் நாம் நம்மைக்குறித்து மேன்மைபாராட்ட ஒன்றுமில்லை. ஆனால் எத்தனையோ கோடியான மக்கள் மத்தியில் தேவன் என்னை ஏன் தெரிந்துக்கொள்ளவேண்டும்? எனக்கு ஏன் இந்த வெளிச்சத்தைக் கொடுத்து என்னை வழிநடத்த வேண்டும்? நீ என் ஜனம், நான் உன் தேவன் என்று, என்னை ஏன் உரிமையாய் தத்தெடுக்கவேண்டும்? அன்பானவர்களே! இது மறுபடியுமாக எண்ணி, எண்ணிப்பார்த்தாலும் அறியமுடியாத ஒரு பெரிய ஆச்சரியம். ஒரு மெய்கிறிஸ்தவன், எப்பொழுதும் இதை நினைத்து அவன் ஆச்சரியத்தில் முழுகுவான். தேவனுக்கு எப்போதும் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பான்.