அக்டோபர் 7      

“ஓ தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்” (ஏசாயா 55:1)

ஆவிக்குரிய தாகம் நமக்குத் தேவை. அது இல்லையென்றால் நாம் ஆவிக்குறிய வாழ்க்கையில் வளரமுடியாது. தேவன் இங்கு அவ்விதம் தாகமாயிருக்கிறவர்களையே அழைக்கிறார். அவர் அழைக்கிறவராக மாத்திரமல்ல, மெய்யாலும் நமது தாகத்தை தணிக்க வல்லமையுள்ளவராயும் இருக்கிறார். இந்த மகா பெரிய கிருபையை நீங்கள் வாஞ்சியுங்கள். கர்த்தர் தாகமுள்ளவர்களை பாக்கியவான்கள் , ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறார். (மத்  5:5)

தாகமாயிருக்கிறவர்களை தேவன் எங்கு அழைக்கிறார்? ஜீவத் தண்ணீரண்டை அழைக்கிறார். வெறுமையான தண்ணீர் உன்னுடைய தாகத்தை தணிக்காது. இன்றைக்கு அநேகர் தங்கள் தாகத்தைப் போக்க அவ்விதம் வெறும் தண்ணீரான சடங்காச்சாரங்களையும், ஜீவ வழியாக இல்லாதவைகளையும் நாடித் தங்கள் தாகத்தை தீர்க்கப்போகிறார்கள். ஆனால் அவர்கள் அதின் மூலம் திருப்தியடைவதில்லை. அவர்கள் ஒருவேளை ஞாயிற்று கிழமைகளில் ஆலயம் செல்லுவார்கள், வேதம் வாசிப்பார்கள், ஜெபிப்பார்கள். ஆனாலும் மெய்யான ஒரு ஜீவனுள்ள கிறிஸ்தவ ஜீவியம் இல்லாமலும் இருக்கலாம்.

சரி, இந்த ஜீவதண்ணீரை நாம் எங்கு பெற்றுக்கொள்ள முடியும்? ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் தான். சமாரிய ஸ்திரி ஜீவத்தண்ணீரை வாஞ்சித்தபோது இயேசு என்ன சொன்னார்? இயேசு அவளுக்குப் பிரதியுத்திரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குதா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். (யோவான் 4:10) அவ்விதமாகவே சமாரிய ஸ்திரி தன்னுடைய வாழ்க்கையில் ஜீவத்தண்ணீரைப் பெற்றுக்கொண்டது போல நீயும் பெறுவாய் அது உன்னில் என்றென்றும் ஊறும் நீரூற்றாய் இருக்கும்.