கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 11            நம்மில் வாசமாயிருக்கிறவர்         யாக் 4:1–10

நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர்

நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார் (யாக்கோபு 4 : 5)

    தேவ ஆவியானவரைக் குறித்து ‘நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர்’ என்று சொல்லப்படுகிறது. என்றைக்கு ஒரு மனிதன் இரட்சிக்கப்படுகிறானோ அன்றிலிருந்தே பரிசுத்த ஆவியானவர் அவனில் வாசம்பண்ணுகிறார். உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைக் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான் 14:17). தேவ ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியிலும்  தங்கியிருக்கிறார். அவனை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறார். அவன் அதினால் சத்தியத்தை அறிந்து சத்தியத்தில் நடக்கிறான். இன்று அநேகர் பரிசுத்த ஆவியைப் பெற்றோம் என்று சொல்லுகிறார்கள், ஆனால் சத்தியத்தில் நடப்பதில்லை. வேதம் போதிக்கிறது அதுவல்ல. நீங்கள் அவரை அறிவீர்கள் என்றும் போதிக்கிறதை நன்கு கவனித்துப்பாருங்கள். அவரோடு ஆவிக்குரிய தொடர்பு உங்களுக்கு இருக்கும்.

    இந்த ஆவியானவர் நம்மில் வைராக்கிய  வாஞ்சையாயிருக்கிறார் என்று பார்த்தோம். அதாவது உன்னில் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவர் உன்னைக் குறித்தும் உன் சாட்சியைக்குறித்தும், உங்கள் பேச்சுக்களைக்  குறித்தும் ,உன் நடக்கையைக் குறித்தும் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். உன்னில் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர் நீ பரிசுத்தமான வாழ்க்கைவாழ, தேவனுக்கு பிரியமாய் வாழ உன்னில் தொடர்ந்து செயல்படுகிறார். அவர் உன்னில் வாசம்பண்ணுவாரானால் நீ பரிசுத்த வாழ்க்கை வாழ்வது அதில் முன்னேறி செல்ல ஒவ்வொரு நாளும் உனக்கு வாஞ்சையைத் தந்து, அதற்குரிய பெலத்தைத் தந்து வழிநடத்திக்கொண்டே இருப்பார்.

     அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. தேவ ஆவியானவர் உன்னில் வாசம்பண்ணுவாரானால் அவர் கொடுக்கும் வரங்களின் வளர்ச்சியையும், ஆவியானவரின் கனிகளின் வளர்ச்சியையும் உன்னில் அவர் வெளிப்படுத்துவார். அன்பானவர்களே! மெய்யாலும் நீ இரட்சிக்கப்பட்டு, தேவ ஆவி உங்களில் வாசமாயிருந்தால் இது நிச்சயம் நடக்கும்.