பிப்ரவரி 5 கவலைப்படாதிருங்கள் மத்தேயு 6:25-34
“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்” (மத்தேயு 6:31).
பொதுவாக இன்றைக்கு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுகிற கவலைகள் இந்த மூன்று காரியங்களை மையமாக வைத்தே காணப்படுகிறதை நாம் பார்க்கிறோம். ஆனால் வேதம் சொல்லுகிறது, இவைகளை அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள். ஒரு மெய் கிறிஸ்தவனுக்கும் அஞ்ஞானிக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கிறிஸ்தவன் தன்மேல் கண்ணை வைத்திருக்கிற தேவனை அவன் அறிந்திருக்கிறான். அவர் தமது கிருபையின் அடிப்படையில் என்னுடைய வாழ்க்கையில் செயல்படுகிறவராக இருக்கிறபடியால், அவர் என்னுடைய எல்லா தேவைகளையும் அறிந்து இருக்கிறார் என்று அவன் உணர்ந்து வாழுகிறான். “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத் 6:32) என்று இயேசு சொல்லுகிறார்.
தேவன் நம்முடைய காரியங்களையும், நம்முடைய வழிகளையும் அறிந்திருக்கிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இவைகளைக் குறித்து நாம் கவலைப்படும் அளவுக்கு பாரப்படுவது தவறு. அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமான காரியங்கள் நம்முடைய நல்ல ஆவிக்குரிய பிரயோஜனத் தன்மையை வீணடித்து விடுகிறது. “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங்கீதம் 55:22) என்று வேதம் சொல்லுகிறது. நமக்கு இவ்விதமான பாரம் உண்டாகாது என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் நாம் அவைகளை நாமே சுமந்து பாரப்படவேண்டிய அவசியமில்லை. ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே’ என்று ஆண்டவர் சொல்லுகிறார். நாம் நம்முடைய பாரங்களைச் சுமப்போமானால் அது நம்மை அமிழ்த்துவிடும். கர்த்தரிடத்தில் நம் மனதைத் திறந்து நம்முடைய பாரங்களைச் சொல்லி அவர் பேரில் வைக்கும்பொழுது நிச்சயமாக அவர் ஆதரிப்பார் என்பதை நாம் பொறுத்திருந்து கண்டு கொள்ளலாம். ஒருபோதும் தள்ளாடவொட்டார் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நீங்கள் எல்லாவற்றையும் விண்ணப்பத்தில் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.